விசாரணைக் குழுவுக்கான நிபுணர்கள் நியமனத்தை வரவேற்கிறது அமெரிக்கா

26.6.14

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக, விசாரணை நடத்தும் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது. இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேரி ஹாப், இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக, விசாரணை நடத்தும் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, மதிப்புக்குரிய நிபுணர்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கும், அதன் விசாரணைக்கும், முழுமையான ஆதரவை வழங்கும்படி, நாம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தனது சொந்த மக்களுக்கான தனது பொறுப்புக்களை நிறைவேற்றும்படியும், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள், மீளிணக்கம், நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நிலுவையிலுள்ள, கவலைக்குரிய விடயங்களுக்குப் பதிலளிக்க அர்த்தமுள்ள, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

இந்த விவகாரங்களில், முன்னெற்றங்களை எட்டுவதற்கு சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :