இலங்கையில் யுத்த வடுக்கள் இன்னும் ஆறவில்லை- நவனீதம்பிள்ளை

10.6.14

யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறைவின் 5வது ஆண்டை கடந்தமாதம் கொண்டாடியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
இன்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26வது அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய தமது அலுவலகத்தால், நிபுணர்கள் அடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இது தொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்வார்கள் அந்த யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய இலங்கை அரசு ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 5 ஆவது ஆண்டு  கடந்த மாதம் நிறைவடைந்தது. எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தாலும் போரினாலும் உண்டான வடுக்கள்  இன்னும் மாறவில்லை.
பொறுப்பு கூறுதலையும் அதன் மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும்  இந்த பேரவையினால் அதிகாரமளிக்கப்பட்டு, முழுமையான  விசாரணைகளை நடத்துவதற்கு எமது அலுவலகம்  நிபுணர் குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவினருக்கு பல நிபுணர்களுக்கும் அதிகாரமளிக்கப்பட்டவர்களும்  உதவி வழங்குவதற்கு தயாராக உள்ளனர்.

நம்பகமான உண்மையினை கண்டறியும்  செய்முறையுடன் ஒத்துழைக்க இந்த வாய்ப்பை  பயன்படுத்திக்கொள்ளுமாறு  நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன் என பிள்ளை மேலும் கூறினார்.
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை  சுட்டிக்காட்டியதால் தான் முகங்கொடுத்த விமர்சனங்களை பற்றி  தனது உரையில் குறிப்பிட்ட நவி பிள்ளை, பூகோள விழுமியங்களின் கொள்ளை ரீதியான அமைப்பை பாதுகாப்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கிய நன்மை உண்டாகுமென  கூறினார்.

மனித உரிமை மீறல்கள்,  நாடுகளின் குழப்ப நிலைக்கும்  மோதல்களுக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக உள்ளது. எனவே ஒவ்வொரு நாடுகளும் மனித உரிமையினை பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தால் அதற்கு நன்மை உண்டாகும் என அவர் கூறினார்.
இருப்பினும்  எனது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் இழுத்தடிப்புகளாலும் மறுப்புக்களாலும்  எதிர்கொள்ளப்பட்டன. இது நாம் அரசாங்கங்களை விமர்சித்ததால் உண்டானதா? என அவர் கேள்வியெழுப்பினார்.

ஆம், இதுவே  மனித உரிமைகளை பரப்புரை செய்வதன் இயல்பு. அதிகார வர்கத்தினரிடம் உண்மையை கூறுவது சிலருக்குள்ள  சிறப்புரிமைகள்  என்பன மனித கௌரவத்தின் மீதான அசைக்க முடியாத  நம்பிக்கையின் வெளிப்பாடாகும். சில அரசுகள் பேச விரும்பாத  விடயங்களை நாம் கவனத்தில் எடுப்பது இதற்கு காரணமா?

ஒரு நாட்டில் இது கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு உபாயமாக இருக்கலாம். இன்னொரு நாட்டில் இது சிறுபான்மையினர் அல்லது  வந்தேறு குடிகளின் மீதான மனிதாபிமானமற்ற செயற்பாடாக இருக்கலாம்.

சில அரசுகள், ஓரினசேர்க்கையாளர்கள், இருபாலின,  பால்மாறும் தன்மையினர், பெண்கள், தோலில் வெண்மை படர்வோர், சில சாதியினர, சில சமயத்தினர், இனத்தவர்கள் ஏனையோரைவிட குறைவான உரிமைகள் உள்ளவரென  நினைக்கலாம் என பிள்ளை கூறினார்.

கடந்த ஆறு வருடங்களில் தனக்கு அறிவூட்டும் முழுமையான அனுபவங்கள் கிடைத்ததாக  கூறிய அவர்  மனித உரிமை பேரவை  வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி கூறினார்.
ஒரு மாற்றத்துக்கு தான் உதவியதாகவும்  பலமான ஒரு பரப்புரையாளராக  இருந்ததுடன், பயம் அல்லது பாரபட்சமின்றி பேசிய ஒருவராக தான் செயற்பட்டதாக நம்புவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராகவுள்ள நவனீதம் பிள்ளையின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்தப் பதவிக்கு அடுத்ததாக ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த சயிட் அல் குசேன் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :