அனைத்துலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற சிறிலங்கா வன்முறைகள் - மகிந்தவுக்குத் தலைகுனிவு

17.6.14

சிறிலங்காவில், முஸ்லிம்கள் மீது பௌத்த அடிப்படைவாத பொதுபல சேனா தலைமையிலான குண்டர்கள் நடத்திய வன்முறை, அனைத்துலக அளவில், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் இந்த வன்முறைகள் பற்றிய செய்திகளை சுயதணிக்கை செய்துள்ள போதிலும், வெளிநாட்டு ஊடகங்களில், இதுபற்றிய செய்திகள் பெருமளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் வன்முறைகள் தொடர்பான ஒளிப்படங்கள், காணொலிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பிக்குகளால் நடத்தப்பட்ட வன்முறைகளுடன் ஒப்பிட்டு இந்த வன்முறைகள் குறித்த செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இன்று ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ள சவூதி கசெற் நாளேடு, சிறிலங்காவிலும் கூட பௌத்த வெறிபிடித்து விட்டதாக தலைப்பு இட்டுள்ளது.

அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு இந்த வன்முறைகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பொலிவியாவில் நடந்த ஜி 77 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, சிறிலங்கா அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்ரேலியா எச்சரிக்கை, கனடா கண்டனம்

சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை கனடா கண்டித்துள்ளது.
அத்துடன் எல்லா சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கனடா கோரியுள்ளது.
இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், காயமுற்றவர்கள் விரைவாக குணம்பெற வாழ்த்துவதாகவும் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இது மத சுதந்திர உரிமை மீறல் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, இவற்றுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கனடா கோரியுள்ளது.
அவுஸ்ரேலியா பயண எச்சரிக்கை
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு அவுஸ்ரேலியா இன்று பயண எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் சில பகுதிகளில் அமைதியின்மை நிலவுவதால், மிகவும் அவதானமாக இருக்கும்படி அவுஸ்ரேலிய அரசாலங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் அமைதியின்மை மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இரவுநேர ஊரடங்கு சில இடங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மதித்தும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை மதித்தும் நடக்க வேண்டும்.
எந்தவொரு போராட்டங்களையும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகபட்ச கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :