தாக்குதல்கள் தொடர்ந்தால் முஸ்லிம்களுக்குள்ளும் பல பிரபாகரன்கள் தோன்றுவார்கள்

20.6.14

முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக சக பிக்குவயே சவர அலகால் தாக்கி சித்திரவதை செய்த சிங்கள பேரினவாதிகள் அன்பும் கருணையும் மிகுந்த புத்தர் இப்போது இருந்திருந்தால் அவரையும் சித்திரவதை செய்து சுன்னத்தும் செய்து  இருப்பார்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேரசன் தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை, தர்காநகரில் வாழும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இன்று யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர். அதற்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
விடுதலைப்புலிகள்  நாட்டில் இருக்கும் வரைக்கும் விடுதலைப்புலிகளை ஒழிக்கிறேன் என்று கூறி தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை கட்டவிழ்த்து விட்ட அரசாங்கம் அதனுடைய அடுத்த கட்ட நீடிப்புக்கும் இன வாத ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தற்போது முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூபமிட்டு மேன் மேலும் வளர்ப்பதற்காகவும் பேரினவாதம் இப்போது முஸ்லிம் மக்கள் மீது திரும்பி இருக்கிறது.
நாங்கள் சிறுபான்மையினம் என்ற வகையில் தமிழ் மக்கள் இந்த இனவாத பேயினுடைய ஆக்கிரமிப்பு வலிகளை நன்கு உணர்ந்தவர்கள். அந்த வகையில் முஸ்லிம் சகோதரர்கள்  மீதான இந்த இன அழிப்பு நடவடிக்கையினையும்  பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக துடைத்து அழிக்கக்கூடிய அரசின் இந்த தாக்குதலையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

எனினும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தொடர்பிலும் அவர்களது சந்தர்ப்பவாதம் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கூட சாதாரண அப்பாவி எமது முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்படும் போது தமிழ் மக்களாகிய நாங்கள் பாராது இருக்க முடியாது.
இந்த நிலையினை சிங்கள அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் உரத்து குரல் கொடுப்பதற்காகத் தான் நாங்கள் கவனயீர்ப்புபோராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இந்த இலங்கை அரசானது சிறுபான்மை மக்களுடைய மொழி, இன பல்லினத்துவத்தை பண்பாட்டு பல்லினங்களை நிராகரித்து ஒட்டுமொத்த இலங்கைத்தீவையுமே சிங்கள பௌத்த பண்பாட்டை கொண்ட தமது நாடாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றது
 இதே நிலை நீடிக்குமாக இருந்தால் முஸ்லிம் மக்களிடையே பல பிரபாகரன்கள் தோன்றுவார்கள் என்பதை இந்த அரசாங்கம் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

கௌதம புத்தரின் பௌத்தத்தை பின்பற்றுவதாக கூறுபவர்கள் அந்த கருணையையும் அன்பையும் எந்த சந்தர்ப்பத்திலும் காட்டவில்லை .ஜாதிக பல சேனாவின் தலைவர் முஸ்லிம்கள் மீது நல்லுணர்வும் நல்லுறவும் கொண்டிருந்தார்.

அந்த ஒரு காரணத்திற்காக இவர் மீது பாரிய தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆண் உறுப்பிலும் சவரஅலகால் கீறி அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
எனவே இதன்பொருள் முஸ்லீம்களுக்கு ஆதரவாக அவர் செயற்பட்டதாலேயே அவர் தாக்கப்படுவார் என்பதைக் காட்டுகின்றது.

இவ்வாறு புத்தரும் இப்போது இருந்திருந்தால் அன்பு கருணை போதிக்கும் அவர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்திருப்பார்.  நிட்சயமாக புத்தருக்கும் இந்த சிங்கள இனவாதிகள் சுன்னத்து செய்திருக்க தயங்கியிருக்க மாட்டார்கள் என  அவர் மேலும்  தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :