வடகொரியா, சிரியா, ஈரான் அணியில் இடம்பெறப் போகிறதா சிறிலங்கா? – அமெரிக்கா கேள்வி

24.6.14

சிறிலங்காவில் போரின் இறுதி ஏழு ஆண்டுகளில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக்கு, சிறிலங்கா அரசாங்கம்  ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று சிறிலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்து, அமெரிக்கா ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச்செயலர் அதுல் கெசாப் இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில்,
வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகள் தான் இதுபோன்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தன.

அந்த அணியுடன் சேர சிறிலங்கா விரும்புகிறதா?
சிறிலங்காவின் ஒத்துழைப்பும், கூட்டும்- விசாரணை அறிக்கைக்கும் மற்றும் அர்த்தமுள்ள முன்னேற்றகரமான தேசிய மீளிணக்கம், பொறுப்புக்கூறல் செயல்முறைக்கும், மிக நல்லதாக இருக்கும்.
நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடு, மோசமான மனிதஉரிமைகளை மீறும்- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக விசாரணைக்கு ஒத்துழைக்க திட்டவட்டமாக மறுக்கும், வடகொரியா, சிரியா, ஈரான் போன்ற தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் அணியுடன் இருப்பது கவலை தருகிறது.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையில், பொறுப்புக்கூறல் விவகாரங்கள், தமிழ்ச் சமூகத்துடன் அதிகாரங்களைப் பகிர்வது ஆகியவற்றில் சிறியளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளான பின்னரும், சமஸ்டியுடன் தொடர்புடைய தந்திரமான அரசியல் விவகாரங்கள் குறித்த எந்தவொரு அர்த்தமுள்ள பேச்சுக்களையும் என்னால் காண முடியவில்லை.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும் எந்த வகையான பொறுப்புக்கூறலை நோக்கியும் அர்த்தமுள்ள நகர்வுகளைக் காணமுடியவில்லை.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நாட்டின் வடக்கு, தெற்கு என்று எல்லா இடங்களிலும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனைக் கூறுவதற்காக நான் வருந்துகிறேன். இந்த நிலை முடிவுக்கு வர வேண்டும்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியக விசாரணை, சிறிலங்கா தன்னை புரிந்து கொள்ள, போரின் இறுதியில் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள, சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டுள்ள மீளிணக்க செயல்முறைகளைப் பாராட்ட உதவும்.

போருக்குப் பிந்திய நிலைமைகள் கையாளும் விடயத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நீண்ட அனுபவத்தைக் கொண்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :