ஈழத் தமிழர் விவகாரத்தில் ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாடு

5.6.14

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டமை உட்பட சிறிலங்கா அரசாங்கத்தால் அண்மைய நாட்களில் பல்வேறு சமாதான சமிக்கைகள் காண்பிக்கப்படுகின்ற போதிலும், தமிழ்நாடு முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடர்ந்தும் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளார்.

செவ்வாயன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்த கடித்தில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தான் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகளைக் கண்டிக்கின்ற விதத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பரிந்துரை ஒன்றை முன்வைப்பதுடன், போர்க்குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு பொறுப்புக்கூறுவதற்கும் அழுத்தம் வழங்க வேண்டும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
இப்பரிந்துரையானது தமிழீழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கான கருத்துக்கணிப்பைத் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான கோரிக்கையை உள்ளடக்கியதாக வரையப்பட வேண்டும் எனவும் ஜெயலிலதா வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் முடிவடைந்த பின்னர், தற்போது சிறிலங்காவை ஆளும் அரசாங்கத்துடன் இந்தியா கொண்டுள்ள தொடர்புகளை தமிழ்நாட்டு வாழ் மக்கள் பலமாக எதிர்த்து வருகின்றனர் என முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தமானது அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட இனப்படுகொலை மற்றும் இனஅழிப்பு நடவடிக்கை என்பது பல்வேறு சாட்சியங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாரபட்சப்படுத்தப்படுவதுடன், மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாவதைக் கண்டித்து தமிழ்நாட்டு சட்டசபையில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை மீண்டும் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களுக்குச் சொந்தமான கச்சதீவு சிறிலங்காவிடமிருந்து பெறப்பட்டு தமிழ்நாட்டு வாழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை மீளவும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பித்த மனுவில் தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமருடனான சந்திப்பை அடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெயலலிதா தெரிவித்தார்.

மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறுவதற்கு முதல்நாள், சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளையிட்டிருந்தார்.
சிறிலங்கா அதிபர் கடந்த வாரம் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த போது இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னர், ஒரு தொகுதி இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபர் கட்டளையிட்டிருந்தார்.

சிறிலங்கா கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்ட 67 சம்பவங்கள் தொடர்பாகவும், இவர்கள் கைதுசெய்யப்பட்டது தொடர்பான 76 சம்பவங்கள் பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகளாக 41 தடவைகள் அப்போதைய இந்தியப் பிரதமரிடம் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.
'இவ்வாறான சம்பவங்கள் தமிழ்நாட்டு மீனவர் சமூகம் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் ஒரு தேசியப் பிரச்சினையாகும். அப்பாவி இந்தியன் ஒருவன் தாக்கப்படுவதானது இந்தியா மீதான தாக்குதல் என்றே கருதப்பட வேண்டும்' எனவும் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்த மனுவில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார் .
வழிமூலம் - ரைம்ஸ் ஒவ் இந்தியா

0 கருத்துக்கள் :