அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!- இந்தியா மௌனம்!- இலங்கை நிராகரிப்பு

10.6.14

ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 26வது தொடரின் ஆரம்ப உரையிலேயே இதனைத் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜெனிவாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சார் சுதன்ராஜ் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 5 ஆவது ஆண்டு கடந்த மாதம் நிறைவடைந்தது. எனினும் இலங்கையில் போரின் வடுக்கள் இன்னும் மாறவில்லை.
பொறுப்புக் கூறலையும் அதன் மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் இந்த பேரவையினால் அதிகாரமளிக்கப்பட்டு, முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு எமது அலுவலகம் நிபுணர் குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவினருக்கு பல நிபுணர்களுக்கும் அதிகாரமளிக்கப்பட்டவர்களும் உதவி வழங்குவதற்கு தயாராக உள்ளனர்.
நம்பகமான உண்மையினை கண்டறியும் செய்முறையுடன் ஒத்துழைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்கிறேன் என ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்திருந்தார்.

இலங்கை  பிரதிநிதி
ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது இந்த அறிவித்தலை ஐ.நாவுக்கான  இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க தனதுரையில் நிராகரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் விரிவான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும் உள்ளக விரிவான விசாரணைகள்  இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார.
அனைத்துலகம்
இதேவேளை  இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினை தாங்கள் வரவேற்பதாக அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்கிறோ ஆகிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தன.

ஐநா. வின் விசாரணைக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென இந்த நாடுகள், தெரிவித்திருக்க நாடுகளது உள்ளக விவகாரங்களில் ஐ.நா தலையிடுவதாக சீனா சபையில் சாடியது.
இலங்கை தொடர்பிலான அறிவித்தல் குறித்து கருத்து எதனையும் தெரிவிக்காது இந்தியா வழமை போல் மௌனம் காத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :