பெரும்பான்மை சமூக இளைஞர் குழுவொன்று வரப் போவதாக தகவல்:பதுளையில் தொடரும் பதற்ற நிலை

17.6.14

பதுளையில் முஸ்லிம் மக்களுக்கெதிரான வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது முஸ்லிம்  புடவை வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டுள்ளது. இதனால் பதுளைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

 பதுளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தாக்க பெரும்பான்மை சமூக இளைஞர் குழுவொன்று வரப் போவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களையடுத்து பதுளையில் பெரும் பதற்றமும் பீதியும் ஏறபட்டுள்ளது. பதுளையில் ஆங்காங்கே கலகம் அடக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் இடங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பள்ளிவாசல்கள் முன்பாகவும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஊவா மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட பொலிஸார் பதுளை மாநகரில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். வீதித் தடைகளும் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பதுளையில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற அச்சமும் பீதியும் முஸ்லிம் மக்களிடையே இருந்து வருகின்றது.

பதுளை மாநகரை அண்மித்த பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயம் பதுளை அல் - அதான் மகா வித்தியாலயம் பதுளை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் மாலை மாணவ மாணவிகளின் வரவு குறைந்தளவிலேயே இருந்து வருகின்றது. அத்துடன் பதுளை மாநகரமே வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கெதிரான ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் கலைக்கப்பட்டதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ''இன்று போய் நாளை வருவோம்'' என்ற கோஷங்களை எழுப்பிச் சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இது பதுளை மக்களை மேலும் பீதி கொள்ளச் செய்துள்ளது.

0 கருத்துக்கள் :