புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி வெள்ளவத்தையில் பணம் கொள்ளை:இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

25.6.14

வெள்ளவத்தையில் சுமார் 14 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடச் சென்ற ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி கடத்தி பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் இரு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட் டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.


கடந்த 21 ஆம் திகதி வெள்ளவத்தை வியாபார நிலையம் ஒன்றின் பணத்தை அவ் வியாபார நிறுவன உரிமையாளரின் உறவுக்காரரில் ஒருவராகிய வெள்ளவத்தையை சேர்ந்த ஒருவர் வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்றுள்ளார். இந் நிலையில் குறித்த நபரை இடை நடுவே நிருத்தியுள்ள குறித்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் எனக் கூறி தம்மை அறிமுகம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து முச்சக்கர வண்டியொன்றில் இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ள அவ்விரு கான்ஸ்டபிள்களும் குறித்த நபரிடமிருந்து பணத்தொகையை கொள்ளையிட்டுள்ளனர்.

இந் நிலையில் நேற்று முந்தினம் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடொன்ரு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை துரிதப்படுத்திய குற்றவியல் பிரிவு பொலிஸார் கொள்ளையிட்டதாக கூறப்படும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பொலிஸார் மேற்கொன்டுள்ள விசாரணைகளில் 13 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தொகையை இவ்வாறு கடத்தி கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 கருத்துக்கள் :