ஊரடங்கிலும் அடங்காத பௌத்த பேரினவாத வெறி

17.6.14

அளுத்கம பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறைகளில், முஸ்லிம் ஒருவருவருக்குச் சொந்தமான பண்ணையின் காவலாளி கொல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அளுத்கம, பேருவெல வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12 இற்கும் அதிகமான முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வாகனங்கள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
எனினும் பேருவெலவில் நேற்றிரவு பெரியளவிலான வன்முறைகள் ஏதும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலையில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த காவல்துறை ஊரடங்குச்சட்டம், இன்று காலை 8 மணிக்குத் தளர்த்தப்பட்டு, 12 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முந்திய செய்தி
முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள, பௌத்த பேரினவாதக் குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருக்கும் போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமுன்தினம் மாலை தொடக்கம், அளுத்கம, பேருவெல நகரங்களில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முழுவதும், ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்த போதிலும், ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
நேற்றிரவு, வெலிப்பன்ன என்ன இடத்தில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற சுமார் 300 பேர் கொண்டு குழுவொன்றின் மீது, சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கலைத்துள்ளனர்.
அதேவேளை, வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், வெலிப்பன்ன நகர மத்தியில் முஸ்லிம்களின் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்னமும் உறுதிசெய்யவில்லை.
நேற்றுமுன்தினம் இரவு நடந்த வன்முறைகளில், 2 பேர் கொல்லப்பட்டதாகவும்,70 பேர் படுகாயமுற்றதாகவும், சிறிலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீமும், அந்தப் பகுதி மக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண, 2 பேர் கொல்லப்பட்டு, 30 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், களுத்துறை மாவட்டச் செயலாளர்,2 பேர் கொல்லப்பட்டு 36 பேர் காயமுற்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 சிறிலங்கா காவல்துறையினரும், ஒரு பௌத்த பிக்குவும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும். வெலிப்பிட்டிய மக்கள் துப்பாக்கிச் சூட்டில் தமது கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர்.

மின்சாரம் தடைப்பட்ட போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அதனால் யார் சுட்டது என்று பார்க்க முடியவில்லை என்று வெலிப்பிட்டியவைச் சேரந்த ஹுசேன் என்பவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் சம்பவ இடத்துக்குச் சென்ற தடயவியல் நிபுணர்கள் இரத்தக்கறைகள், மற்றும் வன்முறைகள் நடந்த இடங்களில் தடயங்களைச் சேகரித்துள்ளனர்.

இன்னமும் சில இடங்களில் பதற்றம் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சளார் அஜித் றோகண, நிலைமையை இயல்புக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில், சிறிலங்கா காவல்துறையும், இராணுவமும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த வன்முறைகளுடன் தொடர்புடைய எவரும், கைது செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால், சிறிலங்கா படையினர் அளுத்கமவில் நேற்றுமாலை குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
அளுத்கம பின்ஹென்ன பகுதியில் நேற்றிரவு மற்றொரு குண்டர் குழுவின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கலைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பௌத்த, மற்றும் முஸ்லிம் மத தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருமாறு நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்துடன் பொதுபல சேனாவின் வன்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பொதுபல சேனாவுக்குத் தலைமை தாங்கும், ஞானசார தேரர், இந்த வன்முறைகள் தொடர்பான தமிழ் ஊடகங்களே மிகைப்படுத்திய செய்திகளை வெளியிட்டு குழப்பம் விளைவிப்பதாக கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :