ரஸ்யாவில் சிறிலங்கா தூதரக அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

12.6.14

ரஸ்யாவில் நேற்றுமாலை நடந்த சம்பவத்தில், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவிளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார்.

ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள ரொஸ்ரொவ் ஒன் டொன் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொஸ்ரொவ் நகரில், ரஸ்யாவில் சிறிலங்காவின் நாட்கள் என்ற நிகழ்ச்சிக்காக ரொஸ்ரொவ் நகருக்கு வந்த சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞரே, வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா துதரகத்தில் இரண்டாவது செயலாளர் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா தூதரக அதிகாரிகளை அவர்கள் தங்கியிருந்த டொன் பிளாசா விடுதி அருகே, இவர்களின் பொதிகளை ஏற்றிவந்த பாரஊர்தியின் இரண்டு சாரதிகள் மேலதிக பணத்தைக் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போதே, எழுதுவினைஞரை தமது வாகனத்தால் மோதிக் கொன்று விட்டும், தூதரக இரண்டாவது செயலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டதாக ரஸ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவத்தை ரஸ்ய வெளிவிவகார அமைச்சு நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளது.
பார ஊர்தி ஒன்றின் சாரதியே, ரஸ்ய தூதரக நிர்வாக- தொழில்நுட்ப பணியாளரான ரணவிரு என்பவரை தனது வாகனத்தால் மோதிக் கொன்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா தூதரக இரண்டாவது செயலர் ரத்நாயக்க நெஞ்சில் படுகாயமடைந்துள்ளார் என்றும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்காக ரஸ்யா தனது கவலையை தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :