கனடாவில் வசித்து வரும் முன்னாள் புலி உறுப்பினருக்கு வவுனியா நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை!

26.6.14

தற்போது கனடாவில் வசித்து வரும் முன்னாள் புலிகள் உறுப்பினர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைய அவருக்கு முப்பது வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


தற்போது கனடாவில் வசித்து வரும்   ரவிசங்கர் கனகராஜா என்பவருக்கே எதிராகவே  இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் பிறந்த இவர் 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில்  இணைந்து கொண்டுள்ளார்.என நேற்று கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  கூறினார்

 வெளிநாடுகளிலும் பயிற்சி பெற்றுள்ள இவர் 1996, 1997,1999 காலப்பகுதிகளில் கப்பல்கள் ஊடாக வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை நாட்டுக்குள் கொண்டுவந்தமை தொடர்பிலேயே இவருக் கெதிராக இத்தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இவருக்கு எதிராக ஏற்கனவே சர்வதேச பிடியாணை பிரப்பிக்கப்பட்டுள்ளதாகம் அதனடிப்படையில் அவரை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  இவர் 2005 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் அவர்  கூறினார்.

அதேவேளை, ஹொரண ரைகம் தோட்டத்தில் வசித்து வந்த முன்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவின் பிரதான செயற்பாட்டாளராக இருந்த சுப்ரமணியம் ராமசந்திரன் என்பவர் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கடந்த 17  ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் 2004 ஆம் ஆண்டு ஹொரண ரைகம் தோட்டப் பிரதேசவாசியென குறித்த பிரதேசத்தின் கிராமசேவகருக்கு 500 ரூபா இலஞ்சம் கொடுத்து அடையாள அட்டை என்பவற்றை தயாரித்து இப்பிரதேசத்தில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. தற்போது ஓய்வு பெற்றுள்ள சந்தேக நபரான கிராம சேவகர் தப்பியோடியுள்ளதகவும் அவரைக் கைது செய்ய பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த 19 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படையின் முக்கியமான ஒருவராக செயற்பட்ட திருநாகரசு பிரதீபன் என்பவர் கைது செய்யப்பட்டார் இவர் கட்டார் நோக்கி செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்ற போது கைது செய்யப்பட்டதாக ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தேடப்பட்டு வந்த இந்த சந்தேகநபர் தொடர்பில் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமையவே கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.நாட்டில் மீண்டும் சகவாழ்வுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :