பொதுபல சேனா வன்முறைக்கு 3 முஸ்லிம்கள் பலி, 150 பேர் காயம் – தொடர்கிறது பதற்றம்

16.6.14

அளுத்கம மற்றும் பேருவெல பகுதிகளில், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதக் குண்டர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றுமாலை பொதுபல சேனாவினர் அளுத்கமவில் நடத்திய பேரணியை அடுத்து, தொடங்கிய இந்த வன்முறைகள், ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அளுத்கமவில் தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறை, பேருவெல, தெகிவளைக்கும் பரவியிருந்தது.
அளுத்கம மற்றும் பேருவெலவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம், இன்னமும் நீக்கப்படவில்லை.
நேற்று இரவு அளுத்கமவில் பள்ளிவாசல் அருகே, முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்த்து ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு முழுவதும் நடந்த வன்முறைகளில், 80இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் களுத்துறை தள மருத்துவமனை, பேருவெல மாவட்ட மருத்துவமனை, தர்கா நகர் அரச மருத்துவமனை, அளுத்கம கிராமிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயமுற்ற சிலர், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, 150 பேருக்கும் மேல் காயமுற்றதாகவும், அவர்களில், சில சிறிலங்கா காவல்துறையினரும் அடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருவெலவில் முஸ்லிம்களின் 34 வீடுகள் எரிக்கப்பட்டு இரண்டு பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
100 பௌத்த பிக்குகளும், 3000 சிங்களவர்களும் ஒன்றுகூடிய பேரணியே இந்த வன்முறைக்கு காரணம் என்று மாகாணசபை உறுப்பினர் முகமட் இப்திகார் ஜனீல் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த வன்முறைகளில் 30 வீடுகள் எரிக்கப்பட்டதுடன், 500 வீடுகள் சேதமாக்கப்பட்டன. முஸ்லிம்களின் 47 கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறைகளால் முஸ்லிம்கள் பீதியடைந்து, பள்ளவாசல்களில் அடைக்கலம் தேடியுள்ளனர். அந்தப் பகுதிகளில் பதற்ற நிலை காணப்படுகிறது.
வீதீகளில், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெட்கப்படுகிறார் ஹக்கீம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்திருந்த போதும், அவர்களைப் பாதுகாக்க முடியாமற் போனதற்காக வெட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் சர்வதேசத்தக்கு முறையிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த வன்முறைகள் தொடர்பாக, ஆராய்வதற்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக கூடவுள்ளனர்.
அமைச்சுப் பதவிகளை விட்டு ரவூப் ஹக்கீம் விலகலாம் என்று செய்திகள் பரவியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடக்கவுள்ளது.
அமெரிக்கா கண்டனம்
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள வன்முறைகளை அமெரிக்கா கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட ஒழுங்கை பேணி, அனைத்து மக்களினதும், உயிர்களையும், மதவழிபாட்டு இடங்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டு அதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
வன்முறைகளை தவிர்த்து, பொறுமை காத்து, சட்ட ஆட்சியை மதித்து நடக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும், அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :