பாகிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்: இதுவரை 177 தீவிரவாதிகள் சாவு

16.6.14

பாகிஸ்தானின் மிகப்பெரிய விமான நிலையமான கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து தீவிரவாதிகளை களையெடுக்கும் பணியை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கிடங்களை குறிவைத்து இன்று விமானங்கள் மற்றும் டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் இதுவரை 177 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
ஷாவால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 6 இடங்கள் மீது விமானப்படை விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை.

இந்த தாக்குதலின்போது முக்கிய நகரமான மிர் அலி நகருக்கு தப்பிச் செல்ல முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீரான்ஷா அருகில் சாலையில் குண்டுகளை புதைத்து வைத்தபோது 3 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். டேகர்-போயாவில் நேற்று நடந்த தாக்குதலில் 140 தீவிரவாதிகள் இறந்தனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் தெரிக் இ தலிபான் தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையிட்ட உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகள் ஆவர்.

இந்த அதிரடி தாக்குதல் தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவர்களின் முக்கிய தகவல் தொடர்பு மையம் தகர்க்கப்பட்டது. தப்பி ஓடும் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :