யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் : அடம்பிடிக்கிறார் கோத்தபாய

19.5.14

சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை என்றும், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமை குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபட இலங்கைக்கு எல்லா வகையிலான உரிமைகளும் காணப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை கைவிட முடியாது எனவும் தொடர்ச்சியாக கொண்டாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளின் பின்னர் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தை கனடா பிழையாக விளங்கிக்கொண்டுள்ளது ஆனால் சிங்கள தமிழ் மக்கள் யுத்தத்தில் வெற்றியீட்டியுள்ளதாகவும், பயங்கரவாதிகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட பாதிப்புக்களை கனடா விளங்கிக்கொள்ள முடியும்.

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக சொற்பளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களே நாட்டுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இராணுவத்தின் அளவு படையினர் நிலைநிறுத்தம் தொடர்பில் உலக நாடுகள் தீர்மானம் எடுக்க முடியாது எனவும், அதனை தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

0 கருத்துக்கள் :