அமெரிக்கத் தடையை மீறியது சிறிலங்கா - ஈரானிய நிறுவனத்துடன் உடன்பாடு

7.5.14

சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஹொரிசன் என்ற ஈரானிய எண்ணெய் வர்த்தக நிறுவனத்துக்கு. 35 ஆயிரம் தொன் மசகு எண்ணெய் விநியோகத்துக்கான கொள்வனவுக் கட்டளையை வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில், அந்த நாட்டிடம் இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வது சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று துறைசார் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், இந்த கொள்வனவுக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்வனவுக் கட்டளைக்கமைய, 35 ஆயிரம் தொன் ஈரானிய சல்பர் எண்ணெய் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அமெரிக்கத் தடையை மீறி, ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்த முடிவு அரசியல் ரீதியாகவே எடுக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012ம் ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்த பின்னர், ஈரானின் மென் மசகு எண்ணெய்க்குப் பதிலாக பல்வேறு இடங்களில் இருந்து, வெவ்வேறு ரக மசகு எண்ணெயை சிறிலங்கா வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்னர், சட்டவிரோதமான முறையில் ஈரானிய எண்ணெயை சிறிலங்கா வாங்கி வருவது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :