மகிந்த ராஜபக்ச ஏன் தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டக்கூடாது? எரிக் சொல்ஹெய்ம்

16.5.14

தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கமே முதலில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்காவில் சமாதான முயற்சிகளுக்கான ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான, எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் அமைப்புகள் மற்றும், தனிநபர்களைத் தடை செய்யும், நடவடிக்கை வெற்றிகரமான நல்லிணக்க முயற்சிகளுக்கு ஏற்றதல்ல என்று, பிரித்தானிய வெளிவிவகார இணையமைச்சர் ஹியூகோ சுவையர் தெரிவித்துள்ள கருத்தைச் சுட்டிக்காட்டி, தாமும் அதனுடன் உடன்படுவதாக எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக, அமால் அபேவர்த்தன என்பவர் எந்தவொரு புலம்பெயர் தமிழ் அமைப்பாவது நல்லிணக்கத்தை விரும்புகிறது என்பதற்கு ஆதாரமுள்ளதா என்று எரிக் சொல்ஹெய்மிடம் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள எரிக் சொல்ஹெய்ம், எல்லாத் தமிழர்களும், நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன், பலமாக உள்ள தரப்பு முதலில் கைநீட்ட வேண்டும் என்றும், ஏன் மகிந்த ராஜபக்ச அதனை ஆரம்பித்து வைக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீளநிலைப்படுத்துவதும், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :