மோடியும் மகிந்தவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்

18.5.14

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கப்போகும் நரேந்திர மோடியும் 'ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே' என்று இலங்கையின் அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க கூறுகின்றார்.

இருவரும் அரசியல் சித்தாந்த ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகக்கூடியவர்கள் என்றும் தயான் ஜயதிலக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நரேந்திர மோடியே வெற்றிபெறுவார் என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார்.

'தமிழ்நாட்டிடம் தங்கியிராமல் அரசாங்கம் அமைக்குமளவுக்கு மோடி வெற்றிபெறுவார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பியிருந்தார்' என்று கூறினார் ஜயதிலக்க.
இலங்கையை ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடையே பெரிய அளவில் நடைமுறை சித்தாந்தங்களில் வேறுபாடுகள் இருக்காது என்றும் முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க கூறினார்.

'ஒத்த எண்ணம் கொண்ட, தேசியவாத, வெகுஜன மக்களை வசப்படுத்தும் கொள்கை கொண்ட ஒருவர் முக்கிய அண்டை நாடான இந்தியாவின் பிரதமராவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரவேற்கிறார்' என்றும் விபரித்தார் அவர்.

மகிந்த தேவநம்பிய திஸ்ஸவா- இராவணனா?
எனினும் மகிந்த ராஜபக்ஷ எந்த பாத்திரத்தை வகிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே நரேந்திர மோடியுடனான உறவு அமையும் என்றும் கூறினார் தயான் ஜயதிலக்க,
'பௌத்தத்தை இலங்கைக்கு அனுப்பிய அசோகச் சக்கரவர்த்தியின் மென்மையான சக்தியை இணங்கி உள்வாங்கிக் கொண்ட இலங்கை மன்னன் தேவநம்பிய திஸ்ஸனின் பாத்திரமா அல்லது பாஜகவினர் நம்புகின்ற இராமாயணம் கூறுகின்ற இராவணனின் பாத்திரமா என்ற இரண்டு தெரிவுகளும் மகிந்தவிடமே உள்ளன' என்றார் தயான்.

இலங்கைத் தமிழர்களின் தீர்வு விடயத்திலோ அல்லது பாகிஸ்தானுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்தியாவுக்கு இருக்கின்ற கலக்கங்கள் குறித்தோ ராஜபக்ஷ தயக்கம் காட்டினால், அதற்கான விலையை அவரே கொடுக்க நேரிடும் என்றும் முன்னாள் இராஜதந்திரி தயான் சுட்டிக்காட்டினார்.

'மோடியின் பாஜக ஆட்சி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தைப் போலவோ வாஜ்பாய் தலைமையிலான பழைய பாஜக அரசாங்கத்தைப் போலவோ பொறுமையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது' என்றும் கூறினார் இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக செயற்பட்ட முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க.

0 கருத்துக்கள் :