மோடியின் பதவியேற்பில் மகிந்த ராஜபக்ச – நிகழ்வைப் புறக்கணிப்பார் ஜெயலலிதா

22.5.14

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றால், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அந்த நிகழ்வைப் புறக்கணிக்கக் கூடும் என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் காரணமாக, அதனை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான எமது கட்சி கடுமையாக எதிர்த்து வருகின்ற நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கு மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுக உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்நாடு முதல்வரை பதவியேற்பு நிகழ்வுக்கு அழைக்க, உயர்நிலைத் தலைவர் ஒருவரை அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.
எனினும், ராஜபக்ச பங்கேற்கும் நிகழ்வில் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

அதேவேளை, பாஜகவின் தமிழ்நாடு கூட்டணிக் கட்சிகளான மதிமுக, பாமக ஆகியவற்றுக்கு, பதவியேற்பு விழாவில் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை பாஜகவின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் பொன்.இராதாகிருஸ்ணன் நியாயப்படுத்தியுள்ளார்.

அயல்நாட்டு உறவு குறித்து கூட்டணிக் கட்சிகளும், தமிழ்நாட்டிலுள்ள ஏனைய கட்சிகளும், புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எமக்குள்ள பொறுப்பை இது மாற்றிவிடாது.
ராஜபக்ச போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்தாலும், அவர் ஒரு நாட்டின் தலைவர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம்,
“புதிய இந்திய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில் எமது அதிபர் பங்கேற்பார்.
பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி அவரை அழைத்துள்ளார்.
இதற்கு வைகோ எதிர்ப்புத் தெரிவிப்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.
அதுபற்றிக் கருத்துக் கூறவிரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :