சிறிலங்காவின் தடையை நிராகரித்தது கனடா – புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு நிம்மதி

1.5.14

சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 424 தனிநபர்கள் மீதான தடையை தமது நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று கனடா அறிவித்துள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் மற்றும் வெளிவிவகார இணை அமைச்சர் லின்னே யெலிச் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் சில கனேடிய அமைப்புகள் மற்றும் தனிநபர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறித்து கவலை கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், கனடாவில் தமது கருத்துகளை சட்டபூர்வமான வகையில் சுதந்திரமாக வெளியிடலாம்.
சிறிலங்காவின் நடவடிக்கை, கனடாவில் சட்டரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
எனினும், இந்தப் பட்டியலில் இலக்கு வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் சிறிலங்காவில் அந்த நாட்டு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தடுத்து வைக்கப்படவோ, கைது செய்யப்படவோ சாத்தியம் உள்ளது.
சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளில் புலம்பெயர் குழுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கக் கூடும்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில தரப்புகள் குறித்து நாமும் சிரத்தை கொண்டுள்ள போதிலும், பயங்கரவாதத்தை அடக்குவதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் அனைத்துலக சட்டங்களுக்கு, குறிப்பாக அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாகவே அமைய வேண்டும் என்பதையும் சிறிலங்காவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

எல்லா வகையான பயங்கரவாதத்தையும் அடக்குவதில் கனடா தொடர்ந்தும் பற்றுறுதி கொண்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக 2006 இல் பட்டியலிட்ட கனடா, உலகத் தமிழர் இயக்கத்தை 2008 இல் அந்தப் பட்டியலுக்குள் கொண்டு வந்தது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 கருத்துக்கள் :