வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து புதிய சான்றுகள் கிடைத்துள்ளன – சட்டவாளர் யஸ்மின் சூகா

21.5.14

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பாக, புதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக, சிறிலங்கா தொடர்பான ஐ.நா பொதுச்செயலரின் ஆலோசகரும், மனிதஉரிமைகள் சட்டவாளருமான யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். எனவே, இதுதொடர்பான உண்மைகளைக் கண்டறிய அனைத்துலக சுதந்திர விசாரணை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  இந்த சாட்சியத்தின்படி விடுதலைப் புலிகளின் உயர்மட்ட காவல்துறை தலைவர் மற்றும், சிவில் நிர்வாக தலைவர்களை சரணடைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்க உயர்மட்டம் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் உயர்மட்ட சிவில் நிர்வாக மற்றும் காவல்துறை தலைவர்கள் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டது மிகமோசமான அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல் என்றும் அவர் கூறியுள்ளார்.

  அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெள்ளைக்கொடி சம்பவம் இடம்பெற்ற போரின் இறுதி நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  அதில், சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலராக இருந்த பாலித கொஹன்ன, எவ்வாறு சரணடைவது என்று ஐரோப்பிய நடுவர் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள், சரணடைதல் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி பரிமாற்ற விபரங்கள், விடுதலைப் புலிகளின் இரண்டு அரசியல் தலைவர்கள் சரணடைந்ததை நேரில் கண்ட நான்கு சாட்சிகள் உள்ளிட்ட பல சான்றுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :