இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் மோடியிடம் புதிய தீர்மானம் தேவை - மாவை சேனாதிராசா

24.5.14

இரு நாட்டு அரசுகளினதும் நலன் களைக் கருதி இந்தியாவின் புதிய அரசு நல்லதொரு தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும். அதற்கு வெளிநாட்டு அமைப்புக்களும் தங்களது ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, காணாமல்போதல், மீனவர் பிரச்சினை, மீள்குடி யேற்றம் தொடர்பாக அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.பாடி விடுதியில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
மீனவர் பிரச்சினை,காணாமல் போனோர் பிரச்சினை ஆகியன இனப் பிரச்சினை எவ்வளவு நீண்டதாக இருக்கிறதோ அதை விட அதிகமாக நீண்ட காலம் தொடர்கிறது. வடபகுதியிலும், கிழக்கிலும் மீனவர் பிரச்சினை தொடர்கிறது. 

திருகோணமலையில் தென்னிலங்கை மீனவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
தழிழர்களின் பிரதேசத்தில் தென்னிலங்கையில் இருந்து வருவோர் காலத்துக்குக் காலம் தங்கியிருந்து மீன்பிடிப்பது, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவது, நவீன உபகரணங்களைப் பயன்படுத்துதல் என்பன வடக்குகிழக்கில் தொடர்கின்றன.

வடக்கு மீனவர்கள் போரின் காரணமாகச் சொந்த நிலங்களில் குடியமர முடியாமல் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
தென்னனிலங்கை மீனவர்கள் இராணுவத்தின் ஆதரவுடனும் பாதுகாப்புடனும் மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் எமது மீனவர்களுக்குக் கடற் படையினரால் பாஸ் நடை முறை உள்ளதுடன் ஆழக்கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. விகிதாசாரத்தின் அடிப்படையில் மீனவர்கள் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டும் உள்ளனர்.

இதனைவிட தென்னிந்திய மீனவர்கள் எமது கடல் பிரதேசத்தில் அத்துமீறி டோலர் படகுகளைப் பாவித்து மீன் பிடிப்பது, வளங்களை அழிப்பது, தென்னிலங்கை மீனவர்கள் அதிகமாக வந்து மீன்படிப்பது என்பன மீனவர் சமூகத்துக்குப் பெரும் பிரச்சினையாகவுள்ளன.

கடல்வளம் மட்டுமல்லாது விவசாய நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக அபகரிக்கப்ட்ட நிலங்கள் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

மீனவர்களின் கைதுகளும், விடுதலைகளும் பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்து விட முடியாது. இதற்கு நிரந்தரமாகத் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு இந்தியாவின் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதிநிதிகளிடம் எமது கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

எமது போராட்டத்துக்கு வெளி நாட்டவர்களும் கைகொடுத்தால் போராட்டம் வெற்றி யளிக்கும் என்றார்.

0 கருத்துக்கள் :