தமிழ் மக்கள் ஏன் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர முடியாது?

16.5.14

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்ற யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஏன் தடையாக உள்ளது என சிறிலங்காவின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழ் பேசும் மக்கள் ஏன் இவ்வாறு தடுக்கப்படுகின்றனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆசியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஜே.பி.ஜெயதேவன், 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - போர் மற்றும் சமாதானத்தின் நிழல்' என்கின்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது மே 16 தொடக்கம் 20 வரை மூடப்படுவுள்ளதாக இவ்வார ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கடிதங்கள் மூலம் அறிவித்திருந்த போதிலும், இதற்கான காரணம் என்ன என அவர் குறிப்பிடவில்லை எனவும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் இடம்பெற்றிருந்ததால் பல்கலைக்கழக மாணவர்கள் இந்நாளைத் துக்கநாளாகக் கடைப்பிடிக்கலாம் என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழகம் மூடுவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது எனவும் கலாநிதி ஜெயதேவன் குறிப்பிட்டுள்ளார்.

"பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதற்கு வழிகாட்டுவதாகச் சந்தேகிக்கப்படும் பேராசிரியர்கள் மற்றும் கலைப்பீட மற்றும் விஞ்ஞான பீட மாணவத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவ மன்றத் தலைவர் ஆகியோருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மே 07 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தது" எனவும் கலாநிதி ஜெயதேவன் மேலும் தெரிவித்தார்.

"சிறிலங்காவில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்று எட்டப்படுவது தொடர்பில் மிகக்குறைந்தளவான நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். ஏனெனில் தமிழ் மக்கள் போரின் போது இறந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குக் கூடத் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்" என யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் விஞ்ஞான ஆசிரியர் சங்கத் தலைவர் கலாநிதி ஜெயதேவன் சுட்டிக்காட்டினார்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது தான் பெற்றுக் கொண்ட போர் வெற்றியை மிகப் பிரமாண்டமான அளவில் மாத்தறையில் கொண்டாடவுள்ளதாகவும், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்கின்ற அச்சத்திலிருந்து சிங்கள மக்களை விடுவிப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கமானது போர் வெற்றியைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதா? என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
"தமிழ் மக்கள் தாம் போரின் போது இழந்த பல ஆயிரக்கணக்கான இளையோர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்கப்படுவது ஏன்?" என கலாநிதி ஜெயதேவன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமது குடும்பத்து உறுப்பினர்களை இழந்திருந்தாலும் அல்லது இழக்காதிருந்தாலும் கூட தமிழ் மக்கள் போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கான சுதந்திரத்தைக் கொண்டுள்ளனர் எனவும் "சிங்கள மக்கள், ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கான சுதந்திரத்தைக் கொண்டுள்ளார்கள் எனின், தமிழ் மக்கள் ஏன் இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர முடியாது?" என கலாநிதி ஜெயதேவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் படுகொலையை நினைவுகூர வேண்ய நாளில் பல்கலைக்கழத்தை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்ததை கலாநிதி ஜெயதேவன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலானது பல்கலைக்கழத்தின் சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், மிகவும் மேன்மையான கல்வியறிவையும் புலமைப்பரிசிலையும் வழங்குவதற்குத் தேவையான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆற்றலை இது சீர்குலைப்பதாகவும் ஜெயதேவன் மேலும் சுட்டிக்காட்டினார்.

"பல்கலைக்கழகமானது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான மற்றும் விவாதங்களை மேற்கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான இடமாக இல்லாவிட்டால், பல்கலைக்கழகமானது உண்மையான காரணிகளைக் கற்பிப்பதற்கு அச்சப்பட்டால், மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் விரிவுரைகளுக்கு சமூகமளிக்க அச்சப்பட்டால், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்கலைக்கழத்தில் தமது கல்வியைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படாது தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டால் நாங்கள் எமது இளைஞர்கள் தமது எதிர்காலத்தை மாற்றுவதற்கான சாதகமான வாய்ப்புக்களை வழங்காது ஏமாற்றுபவர்களாவே இருப்போம்.

சிறிலங்காவில் வாழும் அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் இவற்றைத் துணிந்து செய்யாவிட்டால் நாங்கள் முழுச் சமூகத்தையும் ஏமாற்றியவர்களாகக் கருதப்படுவோம்" என கலாநிதி ஜெயதேவன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வழிமூலம் : ColomboPage/http://www.puthinappalakai.com/

0 கருத்துக்கள் :