ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைப்போருக்கு இத்தீர்ப்பு சாட்டையடியாகும்! இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் பாராட்டு

12.5.14

வடமேல்மாகாணத்தில் ஆசிரியையொருவரை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து செயற்படுவோர் அனைவருக்கும் இது ஒரு சாட்டையடியாகும்.

இவ்வாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆசிரியரை மதிக்காத தனிமனிதன் முன்னேறியதில்லை. அதேபோல் அந்த சமுகமும் முன்னேறியதில்லை.இதனை சகலரும் அறிவர்.

இன்று கல்வி அரசியல் மயப்படுத்தப்பட்டுவருவதால் சாதாரண இடமாற்றத்திற்குக்கூட ஆசிரியர்கள் அரசியல்வாதிகளிடம் படையெடுக்கும் நிலை தோன்றிவருகிறது. இடமாற்றம் மட்டுமல்ல 10மாத கடன் தொடக்கம் இன்னோரன்ன தேவைகளுக்காக அரசியல்வாதிகளை நாடிவருகின்றனர்.
இவ்வேளைகளில் அவர்களது வீம்புகளும் சேட்டைகளும் மிஞ்சிவிடுகின்றன. அதில் ஒரு அங்கமே பிரஸ்தாப ஆசிரியைக்கு நேர்ந்துள்ளது.

பிரஸ்தாப அரசியல்வாதியைப்போல் ஒரு சில கல்வி அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆசிரியர்களோடு முறையாக கதைப்பதற்குக்கூட தெரியாமலுள்ளனர். ஆசிரியர்களை கொத்தடிமைகளாக நினைத்து அதிகார தோரணையில் ஆணவத்தோடு பேசும் அதிகாரிகளை பட்டியல்படுத்திவருகிறோம்.

உரிய தேசிய மாகாண இடமாற்றவிதிகளுக்கமைவாக இடமாற்றசபைகளைக்கூட்டி ஆசிரிய இடமாற்றங்களை மேற்கொள்கின்றபோது பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
மாறாக சில அதிகாரிகள் சில அரசியல்வாதிகளின் ஓரக்கண் பார்வைக்காக இடமாற்றசபைகளையும் கூட்டாது தான் தோன்றித்தனமாக செய்யும் இடமாற்றங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. கூடவே விரக்தியும் தோன்றுகின்றன.

வடக்கிலும் கிழக்கிலும் ஆசிரியர் இடமாற்றம் விவகாரம் அவ்வப்போது பிரச்சினைக்குரியதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் வருட ஆரம்பத்தில் மட்டுமே இப்பிரச்சனை எழுவதுண்டு.
ஆனால் இப்போது வருடம் பூராக இடமாற்றப்பிரச்சினை எதிர்நோக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி மற்றும் பாரபட்சங்கள் பற்றி பல தடவைகளில் எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.

இதனை பல தடவைகள் உரிய மாகாண கல்விச் செயலாளர் முதல் மாகாண கல்விப்பணிப்பாளர் வரை பல தடவைகள் கூட்டங்களில் சந்திப்புகளில் சொல்லிவருகிறோம். ஆனால் அவை கவனத்திற்கு எடுக்கப்பட்டதாகவோ அமுலுக்கு வருவதாகவோ தெரியவில்லை. இது கவலைக்குரியது.

உதாரணமாக பட்டிருப்பு வலயத்தில் எந்தவொரு இடமாற்றசபையையும் கூட்டாது தன்னிச்சையாக கடந்த முதலாந்தவளைப் பரீட்சைக்காலத்தில் 10 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக்காலகட்டத்தில் இவ்விடமாற்றத்தை நடாத்துவதற்கு என்ன தேவை? அதற்கு யார் அனுமதியளித்துள்ளார்?
இதே வலயத்தில் துறைநீலாவணையைச்சேர்ந்த இரு தரமான ஆசிரியைகளை சொந்த பகைமையைப் பாராட்டி இடமாற்றம் செய்துள்ளனர். இதனை முதலமைச்சர் முன்னிலையில் மாகாண கல்விப்பணிப்பாளரிடம் ஆதாரத்துடன் கூறியபோது நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் ஒரு வலயத்தில் எத்தனை வருடங்கள் கடமையாற்றலாம் ? என்ற வரையறை கிழக்கு மாகாணத்தில் இல்லையா? ஆசிரியர்கள் மட்டும் 08 வருடங்களானால் இடமாற்றம்.அவர்கள் மட்டும் பந்தாடப்படலாமா?
எனவே நீதிமன்ற தீர்ப்பு பலரது கண்களை திறக்கச்செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம். இன்றேல் சட்டநடவடிக்கையை நாட நிர்ப்பந்திக்கப்படுவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :