தொடர் குண்டு வெடிப்புகளால் அதிர்ந்தது சீனா: 31 பேர் உடல் சிதறி சாவு

23.5.14

தொடர் குண்டு வெடிப்புகளால் சீனா அதிர்ந்தது. இந்த குண்டு வெடிப்புகளில் 31 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 90-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
வெடிகுண்டுகள் வீச்சு
சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில், முஸ்லிம் ஐகுர் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு பிரிவினைவாத தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள ரெயில் நிலையம் ஒன்றில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 79 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஜின்ஜியாங் தலைநகரான உரும்கியில், ரென்பின் பூங்கா அருகில் பிரசித்தி பெற்ற திறந்தவெளி சந்தை ஒன்று உள்ளது. இந்த சந்தை நேற்று காலை வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது காலை 7.50 மணியளவில் 2 வாகனங்களில் வந்த தீவிரவாதிகள், அதிரடியாக சந்தைக்குள் புகுந்தனர். அங்குள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது திடீரென வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் தாங்கள் வந்த ஒரு வாகனத்தையும் வெடிக்கச்செய்தனர்.
31 பேர் பலி
தொடர்ந்து குண்டுகள் வெடித்ததால் சந்தை முழுவதும் தீப்பிழம்பாகவும், புகை மண்டலமாகவும் காட்சியளித்தது. இந்த தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள், உயிர் தப்புவதற்காக ஆங்காங்கே சிதறி ஓடினர். இதனால் சந்தை முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. இந்த சம்பவத்தின்போது, சுமார் 12 வெடிகுண்டுகள் வரை வீசப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். தீவிரவாதிகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் சிக்கி, 31 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 90-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
மீட்புப்பணி
இந்த குண்டு வெடிப்புகள் குறித்து தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வண்டிகளும், மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து உரும்கி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் கண்டனம்
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என கூறியுள்ள அவர், சம்பவ இடத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது ஒரு பயங்கரவாத வன்முறை சம்பவம் என வர்ணித்துள்ள சீன பொது பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது. சீனாவையே அதிர வைத்துள்ள இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு, ‘கிழக்கு துர்கிஸ்தான் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு’ காரணமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :