இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன்

7.4.14

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இலங்கை சாம்பியனானது.

பங்களாதேஷில் ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை இந்தியா அணியை எதிர்கொண்டது.

கடும் மழை காரணமாக, போட்டி 40 நிமிடம் தாமதமாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை அணித் தலைவர் மாலிங்க களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. இலங்கை அணியில் சீக்குககே பிரசன்னவுக்கு பதில், திசர பெரேரா வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணிக்கு ரகானே (3) அதிர்ச்சி தந்தார், ரோகித் (29) ஓரளவு கைகொடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் கடந்தார். யுவராஜ் (11) சொதப்பினார். கோலி 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 130 ஓட்டங்களை பெற்றது. டோனி (4) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

15.1 ஓவர்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்து. இதனால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 150 ஓட்டங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் இறுதி ஐந்து ஓவர்களை சிறப்பாக வீசி 30 ஓட்டங்களை மாத்திரமே விட்டுகொடுத்தனர்.

குலசேகர மெத்தியூஸ் மற்றும் ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றியபோதும் மாலிங்க, சேனாநாயக ஆகியோர் குறைவான ஓட்டங்களை விட்டுகொடுத்து சிறப்பான பந்து வீச்சு பிரதியை பதிவு செய்தனர்.

 இதனையடுத்து 131 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்தை பெற்று கொடுக்க டில்சான் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோர் களம் கண்டனர்.

குசேல் ஜனித் பெரேரா நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 5 ஓட்டங்களுடன் அதிர்ச்சியளித்து அரங்கு திரும்பினார். இதனையடுத்து அதிரடியை தொடர்ந்த டில்சான் அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் பிடிகொடுத்து 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களத்தில் இருந்த மஹேல ஜயவர்தனவுடன் குமார் சங்கக்கார கைகோர்த்தார். அதிரடியாக ஆடிய  மஹேல ஜயவர்தன  சர்வசே இருபது20 உலக கிண்ணத் தொடர்களில் விரைவாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களம் கண்ட திரிமான 7 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். இதன்பின்னர் களத்தில் இருந்த குமார் சங்கக்கார அதிரடியாக துடுப்பெடுத்தாடி 52 ஓட்டங்களை கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் திசரே பெரேராவும் அதிரடியாக 21 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் இலங்கை 17.5 ஓவர்களில் 132 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

0 கருத்துக்கள் :