புலம்பெயர் அமைப்புக்களின் தடைக்கான ஆதாரங்கள் என்ன? -இலங்கை அரசிடம் கண்காணிப்பகம் கேள்வி!

8.4.14

வெளிநாட்டில் இயங்கும் 16 தமிழ் அமைப்புக்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பவர்கள் என்று குறிப்பிட்டு பரந்தளவிலான முடிவு ஒன்றை இலங்கை அரசு எடுத்திருப்பது நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்களின் அமைதியான செயற்பாட்டை முடக்கும் நோக்கம் கொண்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

மேற்படி குழுக்கள் அல்லது தனியாட்களின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து அரசு சாட்சியங்களை முன்வைக்க வேண்டும் அல்லது அவர்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மிக மோசமான, ஆனால் செயலிழந்து விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பிரதான புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்த்துக் கட்டுப் போடுவதற்கு, பயங்கரவாதத்துக்கு பதிலடியாகப் பிரயோகிக்கப்படும் குழப்பகரமான சட்ட விதிகளை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது.
 மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிரட் அடம்ஸ் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறு பரந்த, விரிவான வகையில் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு, சர்வதேசத் தொடர்புகளை வைத்திருக்கும் உள்நாட்டு தமிழ் செயற்பாட்டாளர்களையும் அரசியல்வாதிகளையும் தண்டிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கின்றார்.

பிரதான புலம்பெயர் அமைப்புக்களை சட்டவிரோதமாக்கியிருப்பதன் மூலம் அரசு தமிழ் செயற்பாட்டாளர்களை ஆபத்திற்குள் நிறுத்தியிருக்கின்றது.
அமைதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களை பயங்கரவாத பட்டியலிட்டிருப்பது இலங்கை அரசின் மிக மோசமான செயற்பாடாகும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

0 கருத்துக்கள் :