நெடுங்கேணியில் மோதல்; கோபி சுட்டு கொலை

11.4.14

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் தப்பிச் செல்ல முற்பட்ட போது   இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த மற்றைய நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை .

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும் நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டி தேடுதல் மேற்கொண்டுவந்தனர். 

கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கோபிக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற கிளிநொச்சியைச் சேர்ந்தஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை  கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான ராசமலர் என்பவரும்  கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற. இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கோபி சுட்டு கொலை செய்யப்ப்டதாக இராணுவத்தினர் தெரிவித்திருப்பதினால் இது வரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு கொண்டுவரப்படலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துக்கள் :