பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா

23.4.14

கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த பிரித்தானியப் பெண், சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் அனைத்துலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணான, நயோமி மிச்சேல் கோல்மன், நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த காரணத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவரை நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நாடுகடத்துவதற்கான குடிவரவுத் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்தவரின் மத உணர்வுகளைக் காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பிரித்தானியப் பெண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக, அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிவோம் என்றும், அவருக்கான உதவிகளை தூதரகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்நத விவகாரம் அனைத்துலக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைகாலமாக சிறிலங்காவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து அனைத்துலக அளவில் வலுவடைந்து வருகிறது.

பிரித்தானியாவும், அவுஸ்ரேலியாவும் அண்மையில் பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது சிறிலங்காவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்தநிலையில், புத்தரின் படத்தை பச்சை குத்திய காரணத்துக்காக பிரித்தானிய சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தி உலகளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருப்பது சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் அச்சத்துக்குள்ளாகியுள்ளது.

இது இந்த ஆண்டில் சிறிலங்காவின் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை எற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :