இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்- மனோ கணேசன்

22.4.14

எங்கள் இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எங்கள் மேல்மாகாணத்து தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு தேடும் அதேவேளையில், எங்களையும், உங்களையும் உள்ளடக்கிய தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு தேடுவதிலும் நாம் பங்களிக்க வேண்டும்.
இந்த நாட்டில் அதிகாரப்பகிர்வுக்கு அடையாளமாக 13ம் திருத்தம் இன்று இந்நாட்டு யாப்பில் இருக்கின்றது. அந்த 13ம் திருத்த சட்டத்தின் மீதே இந்த சபை நடைபெறுகிறது. எனவே தேசிய இனப்பிரச்சனை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின்மீது நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை, வடமாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும்.
 
நமது கட்சி மேல்மாகாணத்தில் வாழும் நான்கு இலட்சம் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. நாங்கள் எத்தனை பேர் இந்த சபையில் இருக்கின்றோம் என்பது முக்கியம் இல்லை. நாங்கள் இங்கே என்ன செய்ய விளைகிறோம் என்பதுதான் முக்கியமானது.
பெரிய கட்சிகளின் அதிகாரப்பல, பணபல வரப்பிரசாதங்கள் எம்மிடம் கிடையாது. நமக்கு இவற்றை எவரும் தருவதும் கிடையாது. நாம் நமது இந்த 51,000 ஆயிரம் வாக்குகளை பெரும் சவால்களின் மத்தியிலேயே பெற்றோம்.
1999ல் வெறும் 3,200 விருப்பு வாக்குகளை மாத்திரம் இந்த மேல்மாகாண சபைக்கு, கொழும்பு மாவட்ட பிரதிநிதியாக வந்த நான், இந்த 2014ம் வருடத்தில் 51,000 மேல்மாகாண தமிழர்களின் பெருவாரியான வாக்குகளுடன் இந்த மேல்மாகாணசபைக்கு சபைக்கு அதே கொழும்பு மாவட்ட பிரதிநிதியாக, குகவரதனையும் கூட்டிக்கொண்டு வந்துள்ளேன். எமது வளர்ச்சி பிரமிக்கதக்கது. கண்ணை திறந்து பார்ப்பவர்களுக்குதான் எங்கள் தனித்துவ வளர்ச்சி புரியும்.
மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களின் அபிலாஷை, தேவை, எதிர்பார்ப்பு, துன்பம், கோபம் ஆகிய அனைத்தையும் நாம் இந்த சபையில் உரத்த குரலில் முன்வைப்போம். ஆனால், அது ஒரு நாளும் தமிழ் இனவாத குரலாக இருக்காது. நான் இனவாதி இல்லை. தமிழர்களின் துன்பங்களை பற்றி சளைக்காமல் பேசி குரலெழுப்பும் அதேவேளையில் நாம் சிங்கள சகோதர மக்களுடன் ஐக்கியமாக வாழ ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்து, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி வருகிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறாவது மேல்மாகாணசபையின் கன்னியமர்வு இன்று பத்தரமுல்லை மேல்மாகாணசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தனது கட்சி தலைவர் உரையை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :