நந்தகோபனை மலேசியாவில் பிடித்து கொழும்புக்கு கொண்டு வந்தது சிறிலங்கா அரசு

8.4.14

வெளிநாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவரான நந்தகோபன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கபிலன் அல்லது நந்தகோபன் என்பவரே, ஈரானிய, மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன், சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளால், கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், 6ம் நாள், இவர் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் இதுபற்றிய தகவலை வெளியிடாமல் மறைத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நெடியவனின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பின் பிரதி தலைவர்களில் ஒருவராக நந்தகோபன் செயற்பட்டு வந்துள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகளில், இருந்து இயங்கிய இவர், போலி கடவுச்சீட்டுடன் மலேசியாவில் இருந்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் வழியாக லண்டனுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்.
நந்தகோபன் தெஹ்ரானில் இருப்பதை தென்கிழக்காசிய புலனாய்வுத் தகவல் சிறிலங்காவுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, சிறிலங்கா விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், ஈரானிய அதிகாரிகள் அவரை தெஹ்ரான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி, மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பினர்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை மலேசிய அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.

அதேவேளை, மலேசிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சிறிலங்கா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நந்தகோபன், கடந்த மாதம் 6ம் நாள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்.
நந்தகோபன் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்ததால், ஊன்றுகோல் உதவியுடனேயே நடமாடக் கூடிய நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :