படிப்படியாக காணிகளை இராணுவம் விடுவிக்கும்

4.4.14

இராணுவத் தேவைகளுக்காகத் தற்காலிகமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தற்போது படிப்படியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு கட்டமாக இன்று ஒரு தொகுதி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஏனைய காணிகள் படிப்படியாக அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ச.
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 100 ஏக்கர் விவசாயக் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும், மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள கேப்பாபிலவு மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 101 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

அந்த நிகழ்வுக் குத்தலைமை தாங்கி உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இந்தப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்தவர்களுக்கு காணிகளைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். போரின் பின்னர் ஜனாதிபதியின் அபிலாஷையும், எதிர்பார்ப்பும் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவது என்பதுதான். 97 சதவீத மக்கள் சொந்தக் காணிகளில் வீடமைத்து வாழக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற் பட்டுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சிலர் கேட்ட காணிகளை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
எனினும் அவர்களுக்கு பிறஇடம் ஒன்றில் நல்ல காணிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டமாக இருந்தது. அதன் படி வீடுகளும் அரச செலவிலேயே அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது.

இந்தப் பகுதியில் முதற்கட்டமாக 50 வீடுகளை அமைத்து வழங் கினோம். தற்போது 101 வீடு களை அமைத்துக் கொடுத்துள் ளோம். மூன்றாம் கட்டமாக 141 வீடுகள் அமையவுள்ள நிலையில் 66 வீடுகளுக்கான அடிக்கல்லை இன்று நட்டுள்ளோம்.
ஜனாதிபதி மீதும் இராணுவத்தினர் மீதும் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போது தான் நம்பிக்கையான எதிர்காலம் உருவாகும். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வளம் பெறும்'' என்று தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த கேப்பாபிலவு மக்கள், போரின் பின்னர் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வில்லை. சீனியாமோட்டை எனும் பகுதியில் 2012ஆம் ஆண்டு அவர்கள் வலுகட்டாய மாகக் குடியமர்த்தப்பட்டனர். சூரியபுரம், கேப்பாபிலவு, கேப்பாபிலவு மத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு குடிமயமர்த்தப்பட்டவர்களாவர்.

தற்போது விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 260 ஏக்கர் வயல் காணிகளில் 29 குடும்பங்களுக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 50 பேருக்குச் சேந்தமான 160 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
அதேவேளை, 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த கேப்பாபிலவு மக்களை திடீரென வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வந்த இராணுவத்தினர் அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்காது கேப்பாபிலவுக்கு அண்மையில் அமைந்திருந்த சூரியபுரம் காட்டுப்பகுதியில் மக்களைத் தற்காலிகமாகத் தங்கவைத்திருந்தனர்.

அவ்வாறு தங்கவைக்கப்பட்ட மக்களது சொந்தக் காணிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் சூரியபுரம் காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரிக் கிராமத்தில் வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

0 கருத்துக்கள் :