ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை- சீமான்

15.4.14

ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம்.
ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் அம்மையார் ஜெயலலிதா. இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்களே. அவர்களை போய் சீமான் ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.
முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சத்தியமாக அதை திருப்பி கட்டி விடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழ் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு தனி ஈழ சோசலிச குடியரசு. இலங்கை ஒரு நாடு அல்ல. அங்கு தமிழர்களும், சிங்களர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையும், ஈழமும் பிரிய ஒரே வழி பொது வாக்கெடுப்பு தான் என்று தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

0 கருத்துக்கள் :