நவநீதம்பிள்ளை இனிமேல் சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது – மகிந்த சமரசிங்க

3.4.14

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில், நவநீதம்பிள்ளையினால் விசாரணைகளை பலவந்தமாக எம்மீது திணிக்க முடியாது.
அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கு நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது.

அனைத்துலக விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை.
உள்ளக விசாரணைகளை நாம் தீவிரப்படுத்தியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் இதன் மூலமாக நியாயத்தை நிலைநிறுத்த முடிவுமென நாம் உறுதியாக நம்புகின்றோம்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் பலகோணங்களிலும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், ‘சனல் 4’ ஒளிநாடா தொடர்பான இராணுவ விசாரணை, காணாமற்போனவர்களைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு, திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் கொலை தொடர்பான சிறப்பு விசாரணை என்று உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் ஆவணங்களை பரிசீலனை வருகிறது.

உள்ளக விவகாரங்கள் குறித்த அனைத்து விசாரணைகளையும் நேர்மையாக முன்னெடுப்பதன் மூலம், குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு காரணமானவர்களுக்கு நியாயமான தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்.

உள்ளக விசாரணைகள் நியாயமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனைத்துலக விசாரணை அவசியப்படாது.
அனைத்துலக விசாரணை என்ற பெயரில் எமது செயற்பாடுகளுக்குள் மூக்கை நுழைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் விருப்பம்.
இதற்காகவே, இவர்கள் சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை வேண்டுமென ஒரே பிடியாக இருப்பதுடன் பலவந்தமாக ஏனைய நாடுகளையும் தமது பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க வைத்துள்ளனர்.

அனைத்துலக விசாரணை சிறிலங்காவுக்கு பொருத்தமில்லாத ஒன்று.
இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பொறுப்பேற்கப்போவதுமில்லை.
நவநீதம்பிள்ளை தலைமையிலான விசாரணைகளுக்கு நாம் எந்த வகையிலும் தயாரில்லாத அதேவளை, இதனை முன்னெடுப்பதற்கு நாம் இடம் வழங்கப்போவதும் இல்லை.

நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு வருவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்த போதிலும், அவர் இங்கு வந்து சிறிலங்கா குறித்த தவறான கருத்துகள் அடங்கிய அறிக்கையையே அனைத்துலக சமூகத்திற்கும் மனிதஉரிமைகள் பேரவைக்கும் முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், எதற்காக அவர் மீண்டும் சிறிலங்கா வர அனுமதிக்க வேண்டும்?
அப்படியே எமது நாட்டிற்கு அவர் வந்தாலும் சிறிலங்கா குறித்த பிழையான அறிக்கையினையே அவர் மீண்டும் முன்வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே அவர் மீண்டும் நாட்டிற்குள் வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்காது.
நவநீதம்பிள்ளை  மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதியும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டிற்குள் வர முடியாது.

உள்ளக விசாரணைகளை நீதி அடிப்படையில் நேர்மையாக முன்னெடுப்பதன் மூலம் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னரிலும் அதிக சக்தி மிக்கதாக உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :