கொழும்பில் அமெரிக்கா நடத்தும் கருத்தரங்கை புறக்கணித்தார் கோத்தா?

2.4.14பல்தேசிய திட்டமிடல் விரிவாக்கல் குழுவின் 'Tempest Express - 24' என்ற பெயரிலான, அதிகாரிகளுக்கான திட்டமிடல் பயிற்சிப் பட்டறை ஒன்றை, அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடமும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்புத் தலைமை அதிகாரி பணியகமும் இணைந்து கொழும்பில் நடத்தி வருகிறது.

கலதாரி விடுதியில் நேற்று ஆரம்பமான இந்த பயிற்சிப் பட்டறையை சிறிலங்காவின் பாதுகாப்புத் தலைமை அதிகாரி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆரம்பித்து வைத்தார்.
வரும் 9ம் நாள் வரை தொடர்ந்து நடக்கவுள்ள இந்த பயிற்சிப் பட்டறையில், அமெரிக்க பசுபிக் கட்டளை பீடத்தின் பல்தேசிய பயிற்சி விரிவாக்கற் குழுவின் அதிகாரி பீட் டி பெலிஸ் ஆரம்ப உரை நிகழ்த்தினார்.

இந்தக் கருத்தரங்கில், சிறிலங்கா படைகளை சேர்ந்த 23 அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் திணைக்களங்களைச் சேர்ந்த 21 பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 20 அதிகாரிகளும் வியட்னாம், கனடா, பங்களாதேஸ், அவுஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, நேபாளம், மாலைதீவு, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொங்கோலியா, சிங்கப்பூர், தாய்லாந்து. ஜப்பான் ஆகிய 15 நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

இயற்கை மற்றும் மனிதனால் விளைவிக்கப்படும் அனர்த்தங்களை நாடுகளின் ஒத்துழைப்புடன் எதிர்கொள்வது தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் ஆராயப்படுகிறது.
இந்த நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், அதிகாரிகள் பலரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கின் இறுதி நாளான வரும் 9ம் நாள் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் உரையாற்றவுள்ளார்.

அதேவேளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்தக் கருத்தரங்கில் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் நடக்கும் அனைத்து பாதுகாப்பு சார் கருத்தரங்குகளிலும் அவரே முன்னிலை வகித்து பங்கேற்பது வழக்கம்.

ஆனால்,ஜெனிவா தீர்மானத்தின் விளைவாகவே அமெரிக்காவுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கை அவர் தவிர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

0 கருத்துக்கள் :