கோபியின் தாய் விடுதலை

15.4.14

இராணுவத்தினரால் தேடப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் உட்படப் பத்துப் பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவர்களுடன் சேர்த்து இதுவரையில் 18 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பளையில், தமிழீழத்தின் காவலர்கள் என்ற துண்டுப் பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் தலைநகரிலும் தமிழர்கள் 65 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவர் தேடப்படுகின்றனர் என்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி பதவியா காட்டுப் பகுதியில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் என்று இலங்கை அரசால் கூறப்பட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகியோர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் உட்பட 8 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். விடுவிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டதுடன் கொழும்பில் தொழில் நிமித்தம் வசித்து வந்தவர்களாவர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மற்றுமொரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்ட கோபியின் தாயார் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் கோபியின் மனைவியான சர்மிளா தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.                           

0 கருத்துக்கள் :