பொலிஸாரால் நிர்வாணமாக ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்

12.4.14

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தி 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது மற்றும் அவரது மகனையும் கர்ப்பிணியான மகளையும் காயங்கள் ஏற்படும்வரை தாக்கியது தொடர்பாக கல்கிஸ்ஸ நீதிவானுக்கு வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு  மேலதிக நீதிவான் பிரபர்ஷா ரணசிங்க அந்தப் பெண்ணுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இரத்மலானை  பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் மிருகத்தனமாக தாக்கியது தொடர்பாக சட்டத்தரணி கிஷாந்த தயானந்த நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்பெண்ணின் கணவர் இதற்கு முன்னர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இப்பெண் கணவரைப் பார்ப்பதற்காக கல்கிஸ்ஸ நீதிமன்றத்துக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இச் சந்தர்ப்பத்தில் ஜீப்பொன்றில் வந்த கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய மோசடி ஒழிப்பு பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

அதன் போது அந்தப் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி உள்ளனர்.  அதைத் தடுக்க வந்த அப் பெண்ணின் கர்ப்பிணியான மகளையும் மகனையும் தாக்கியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை நிர்வாணமாகவே ஜீப்பில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் இப்பெண்ணுக்கு நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள புடவைகள் வழங்கியுள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணி மகளும் மகனும் அயலவர்களால் சிகிச்சைக்காக களுபோவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

0 கருத்துக்கள் :