இப்போதாவது ராஜபக்ச இறங்கி வரவேண்டும் - இல்லாவிட்டால் ஆபத்து என்கிறது ஐதேக

1.4.14

அனைத்துலக சமூகத்துடன் இந்த இறுதிக் கட்டத்திலாவது சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்த வேண்டும் என்று ஐதேக கோரியுள்ளது.
ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா இதுகுறித்து தெரிவிக்கையில்,
மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு நாடு முகம் கொடுத்துள்ள நிலையில், நிலைமைகள் கையை மீறிச் செல்வதை தடுக்க வேண்டும் என்றால், சிறிலங்கா அதிபர் அனைத்துலக சமூகத்துடன் இப்போதாவது பேச வேண்டும்.

இல்லாவிட்டால் அதன் விளைவுகளை மக்களே அனுபவிக்க நேரிடும்.
தேர்தல்களில் வென்றுள்ளதால், ஐ.நா தீர்மானங்களைப் பற்றி தாம் கவலைப்படப் போவதில்லை என்று ராஜபக்ச சொல்கிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால், அரசவளங்களையும், ஊடகங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியும் கூட, அவரது தலைமையிலான ஆளும்கட்சியின் வாக்கு வங்கி வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளது.

இப்போது கூட ராஜபக்ச இறங்கி வராது போனால், ஐ.நா விசாரணையின் முடிவில், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும், அது சிறிலங்காவின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.
எமது ஏற்றுமதியில் 85 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவுமே கொள்வனவு செய்கின்றன.

இந்தியாவும், சீனாவும், எமது ஏற்றுமதியில் வெறும் 6 சதவீதத்தை தான் பங்களிப்பு செய்கின்றன.
தன்னிறைவு பொருளாதாரத்தைக் கொண்டதும், சிறிலங்காவை விட சக்தி வாய்ந்ததுமான ஈரானே, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் தடைகளைச் சமாளிக்க முடியாமல் போராடிக் கொணடிருக்கிறது.
இந்தநிலையில் எமது நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகளை ராஜபக்ச அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால், அனைத்துலக விசாரணை கோரும் தீரமானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்காது.

போரின் இறுதிக்கட்டத்தை மட்டும் வைத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.
போருக்குப் பின்னர் தொடரும் சிவில் சமூகம் மீதான மீறல்கள், ஊழல், சிறுபான்மை மதத்தவர்கள் மீதான தாக்குதல்கள் எல்லாவற்றினாலும் தான் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :