இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்- நவனீதம்பிள்ளை

26.3.14

இலங்கையில் இறுதிப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ​தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 25 மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் நவநீதம்பிள்ளை யின் இந்த கருத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படவுள்ள மூன்றாவது தீர்மானத்தின் வரைவு சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், அனேகமாக இன்று இரவு அது வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களிக்கலாம் எனவும் 10 நாடுகள் நடுநிலை வகிக்கும் எனவும் தெரிகின்றது.
அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரிநீக்ரோ, மொரிசியஸ் ஆகிய நாடுகளால் கூட்டாக முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம், இலங்கையில் இறுதிப் போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
 
இதனைப் பெரும்பாலான ஆசிய நாடுகள் எதிர்க்கின்றன. பாகிஸ்தான், சிங்கப்பூர், வியட்நாம், மியன்மார், இந்தோனேசியா ஆகிய நாடுகள் எதிர்த்தே வாக்களிக்கும் என நம்பப்படுகின்றது. ஜப்பான், இந்தியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நடுநிலை வகிக்கக்கூடும் என்று தெரிகிறது.
 
எப்படி இருந்தபோதும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவது உறுதி என்கின்றன ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன.
 

0 கருத்துக்கள் :