கோவில் தூண்களை திருடிய பிக்கு: சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

15.3.14

திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் கிராமத்தில் நடைபெற்றுள்ள அபகரிப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார்.

அக்கடிதம் பின்வருமாறு,

அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,

திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் கிராமத்தில் நடைபெற்றுள்ள ஒரு அபகரிப்பு தொடர்பானது

கீழ் விவரிக்கப்பட்டுள்ள குற்றச்செயலை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த கிராமம் ஒன்றதான திரியாயில் அமையப் பெற்றுள்ள பிள்ளையார் கணபதி கோயில் மிகவும் புராதனமான ஒரு இந்து ஆலயமாகும்.

இக்கிராமத்தை விட்டு வெளியேறியோர் மீண்டும் இங்கு வர ஆரம்பித்ததோடு இக்கோவிலின் திருத்த வேலைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கோயிலின் புராதான மண்டபத்தின், தாழ்வாக இருந்த கூரையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டு அதை தாங்கியிருந்த பழைமையான ஆறு தூண்கள் நீக்கப்பட்டு புதிய, உயரமான தூண்கள் நிர்மாணிக்கப்பட்டன. நீக்கப்பட்ட பழம்பெரும் தூண்களை பிறகு வேறு விதத்தில் பயன்படுத்தும் நோக்கத்துடன் அவை கோயில் வளாகத்திலேயே வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இம்மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் சில கூலியாட்கள் மற்றும் பொலிஸ்காரர்கள் சிலருடன் கோவில் வளாகத்திற்குள் நுழைந்த ஒரு பௌத்த பிக்கு முதல் நாள் மூன்றும் மறுநாள் மூன்றும் என்ற வீதத்தில், கோவிலில் இருந்த எவரிடமும் எதுவும் கூறாமல் அத்தூண்களை எடுத்துச் சென்றுள்ளார். அத்தூண்களை பக்கத்தில் இருந்த பௌத்த மடத்திற்கே எடுத்து சென்றிருக்க வேண்டும்.

எவ்வாறிருந்த போதிலும், இது ஒரு பகற்கொள்ளையாகும் என்பதை தாங்களும் ஏற்பீர்கள். அண்மைக்காலமாக இது போன்ற இழிவான செயல்கள் அதிகரித்து வருவதோடு, இவ்வக்கிரமங்களை செய்பவர்கள் சட்டத்தினால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்டாது என்ற துணிச்சலுடனேயே இவைகளை மேற்கொள்வது கவலைக்கிடமானது.

இந்த மோசமான செயலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுத்து அபகரிக்கப்பட்ட அத்தூண்களை மேற்படி கோயிலின் நம்பிக்கையார்களிடம் மீண்டும் சேர்ப்பிப்பதற்கு ஆவண செய்யுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களை பனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

இங்கனம்
இரா. சம்பந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை மாவட்டம்

0 கருத்துக்கள் :