ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்காணிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு – அனைத்துலக மன்னிப்புச் சபை தகவல்

20.3.14

ஐ.நாவுக்குத் தகவல் வழங்குவோர் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கண்காணிக்க சிறிலங்காவின் புலனாய்வுப் படைப்பிரிவினால், சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஐ.நாவுக்கான அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிளின்ரர் நேற்று லண்டனில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொறுப்பக்கூறல், மனிதஉரிமைகளுக்காக குரல் கொடுப்போருக்கு எதிராக சிறிலங்கா அரசு அடக்குமுறைகளைக் கையாள்கிறது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும், சிறிலங்கா, அதை திசை திருப்புவதற்காக, அதிருப்தியாளர்களை மௌனமாக்குவதற்கு கேவலமான தந்திரங்களைக் கையாள்கிறது.

மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டவாளர்கள், காணாமற்போனோரின் குடும்பங்களை அச்சுறுத்துவது மற்றும் கேவலமான தந்திரங்களைக் கையாள்வதை சிறிலங்கா நிறுத்த வேண்டும்.

மனிதஉரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை. பிரவீன் மகேசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டது சாதகமான விடயம் என்றாலும், உலக ஏமாந்து விடக்கூடாது.
உண்மையில், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கக் கூடாது.
சிறிலங்கா அதிகாரிகள் விமர்சன குரல்களை அடக்குவதை நிறுத்தி, போருக்கு பிந்தைய மனிதஉரிமை நிலைமை பற்றி, உண்மையான நிலையையும், தமது கருத்தையும் அமைதியாக வெளிப்படுத்துவதற்கு அனைவரதும் பாதுகாப்பையும் உறுதி வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துக்கள் :