புலிகளுக்கு எதிரான போரில் இரசாயன ஆயுதங்கள் - ஆதாரத்தை முன்வைத்தது இந்தியத் தொலைக்காட்சி

17.3.14

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், சீருடையணிந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், போரின் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விபரிக்கும், காணொளிப்பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில், கடற்கரையோரத்தில் சிக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்தக் குண்டுகள் சுமார் 1 கி.மீ சுற்றளவு கொண்ட பிரதேசத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்றும் அந்த இராணுவச் சிப்பாய் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போர் நடந்த பிரதேசத்தில், சிறிலங்காப் படையினரால் அமைக்கப்பட்டிருந்த, போர்த் தளபாடக் காட்சியகத்தில், வைத்து குறித்த சிப்பாயிடம் செவ்வி காணப்பட்டுள்ளது.
இரசாயன ஆயுதம் என்று சுட்டிக்காட்டி அவர், அதுதொடர்பாக, கொச்சைத் தமிழில் விளக்கமளித்துள்ளார்.அதேவேளை, இரசாயனக் குண்டுவீச்சில், உடல் முழுவதும் எரிகாயங்களுடன் அழுது கொண்டிருக்கும் ஆண் ஒருவரினதும், எரிகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும் குழந்தை ஒன்றினதும் ஒளிப்படங்களையும் நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால், வெள்ளைப் பொஸ்பரஸ் என்ற இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது எரிகாயங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதும், அனைத்துலக அளவில் போரில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதுமாகும்.
இதற்கிடையே, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, இந்திய தொலைக்காட்சியில் வெளியான இந்த போர்க்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
“புலிகளுக்கு எதிரான போரில் நாம் எப்போதும், மரபு ரீதியான ஆயுதங்களையே பயன்படுத்தினோம்.
திரிபுபடுத்தப்பட்ட அல்லது பொய்யான இந்தக் குற்றச்சாட்டு, ஜெனிவா கூட்டத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
சிறிலங்கா எந்த ஆயுதங்களையோ, குண்டுகளையோ உற்பத்தி செய்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
அரசாங்கங்கள் மூலமாகவே, அவற்றை நாம் வாங்கினோம்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயன்றனர் என்பது தெரிந்ததே.
அவர்களின் தளங்களில் இருந்து பெருமளவு இரசாயனங்களை நாம் கைப்பற்றியுள்ளோம்.
சிறிலங்கா இராணுவத்துக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான உணர்வுகளை தூண்டிவிடும் நோக்கில் சில தரப்பினரால், இந்த புதிய காணொலியை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நாம் நிராகரிக்கிறோம் ” என்று தெரிவித்துள்ளார்.
நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களைக் காண இங்கே அழுத்துங்கள்

0 கருத்துக்கள் :