அம்மனையும் அல்லாவையும் மேரிமாதாவையும் அகதிகளாக்கியவர்களே இன்று அரசாட்சியில்

9.3.14

ஆலயங்களையும், பள்ளிவாசல்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் தகர்த்து தாக்கியது  இந்த ஆட்சியின் அரவணைப்பில் செயற்படும் இனவாத-மதவாத அமைப்புகள் என்பதை கொழும்பில் வாழும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
இன்று கொள்ளுப்பிட்டியில் எழுந்தருளியிருந்த  பூமாரியம்மன் அகதியாகி அருள்பாலிக்க இடமில்லாமல் இருக்கின்றாள் என்பதை இந்து மக்கள் மறந்து விடக்கூடாது. அத்துடன் தலை நகர் உட்பட இந்நாடு முழுக்க பல்வேறு பள்ளிவாசல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்குதல், அச்சுறுத்தல், அவ மானங்கள்  ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இதனை முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 முன்னணியின் வேட்பாளர் பிரதீப் சந்திரகாந்தின் ஏற்பாட்டில் கொம்பனி தெருடோசன் வீதி தோட்டத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பெரும் எண்ணிக்கையான தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் தமிழ், சிங்கள மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது:

கொம்பனி தெரு இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பெளத்த மக்கள் கலந்து வாழும் பூமியாகும். தமிழர்களும், முஸ் லிம்களும், சிங்களவர்களும் இணைந்து வாழும் மண்ணாகும். இங்கு மலே மக்களும் வாழ்கிறார்கள். உண்மையில் இது முழு நாட்டுக்குமே முன்மாதிரி வட்டாரமாகும். இந்த முன்மாதிரி வட்டாரத்துக்கு  இன்று ஆபத்து வந்தே விட்டது.

ஏனென்றால் எல்லா மதத்தவரும், எல்லா இனத்தவரும் இணைந்து வாழ்வது இந்த அரசுக்கு பிடிக்காதே.
தலைநகரில் வீடுகள் இடிக்கப்படுவது, குடியிருப்புகள் அகற்றப்படுவது கொம்பனி தெருவில்தான் ஆரம்பிக்கப்பட்டுள் ளது.

இன்னமும் பல வீடுகள்  இடித்து அகற்றப்படும் ஆபத்தை இந்த வட்டாரம்தான்  எதிர் நோக்கியும் உள்ளது. எனவே கொழும்பின் வேறு எந்த ஒரு வட்டாரத்தையும் விட, இந்த கொம்பனி தெரு வட்டார மக்கள்தான் இந்த அரசுக்கு காட்டமான பதிலடியை எதிர்வரும் தேர்தலிலே தரவேண் டும். அந்த கடப்பாடு உங்களுக்கு இருக்கிறது.

இந்த அரசு கொழும்பிலே தன் சொந்த சின்னத்திலும் வாக்கு கேட்கிறது. அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் பங்காளிக் கட்சிகளை அனுப்பி அவர்களின் சொந்த சின்னங்களிலும் வாக்கு கேட்கிறது.

வேப்பிலை என்றும், புகையிலை என்றும், ஆலமரம் என்றும், தென்னை மரம் என்றும்,  ஆடு, மாடு, கோழி, குருவி, காகம்  என்றும் அரசும், அரசின் முகமூடி அணிந்த முகவர்களும் தங்கள் சின்னங்களை எடுத்துக் கொண்டு கொம்பனி தெரு விலே இன்று தேர்தல் கால திருவிழா நடத்துகிறார்கள்.

குடியிருப்புகளையும், மத ஸ்தலங்களையும்  உடைத்து அகற்றப்படுவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்ற செய்தியை இந்த அரசுக்குத் தெளிவாகத் தெரிவிக்க இந்த தேர்தலை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் அரசாங்கத்தின் சின்னத்துக்கும், அவர்களின் பங்காளி சின்னங்களுக்கும் வாக்களிப்பீர்களாயின், நீங்களே உங்கள் வீட்டை, பள்ளியை,  கோவிலை, தேவாலயத்தை உடைக்க கடப்பாரையை எடுத்து அரசின் கையில் கொடுத்த பழிபாவத்துக்கு ஆளாவீர்கள்.

அது மட்டுமல்ல, இவர்களை என்ன செய்தாலும் பரவாயில்லை, அடித்தாலும், உடைத்தாலும் இவர்கள் எனக்குத் தான் மீண்டும், மீண்டும் வாக்களிப்பார்கள் என மகாராஜா நினைத்து விடுவார். 

நான் சொன்னதை செய்வேன். செய்வதைத்தான் சொல் வேன். என்னையும் விலைக்கு வாங்க முயற்சித்தார்கள். இன்று அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டு விட்டார்கள். நான் விலை போக மாட் டேன் என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டது.

ஆகவே இன்று ஒரு குறுக்கு வழியை பயன்படுத்தி என்னை அழிக்க பார்க்கிறார்கள். நமது வாக்குகளை சிதறடிப்பதுதான் அந்த குறுக்கு வழி. மக்களின் துன்பங்களை தீர்ப்பது அல்ல, இவர்கள் நோக்கம். அந்த துன்பங்களை உலகறியச் சொல்லும் வாயை மூடுவது தான் இவர்கள் நோக்கம். மக்களின் கண்ணீரைத் துடைப்பது அல்ல, இவர்கள் நோக்கம். அந்த கண்ணீரை துடைக்கும் கரத்தை வெட்டுவதுதான் இவர்கள் நோக்கம். இதை உணர்வுள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் -என்றார். 

0 கருத்துக்கள் :