' தமிழ்மொழிக்கு முதன்மை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்"

8.3.14

வட-கிழக்கின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகவும், பிரதேசத்தின் பெரும்பான்மையினரின் மொழியாகவுமுள்ள தமிழ்மொழிக்கு முதன்மை அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சபையின் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானத்தை சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஞா.கிஷோர் முன்மொழிந்து உரையாற்றினார். இன்னொரு உறுப்பினரான அ.பாலமயூரன் தீர்மானத்தை வழி மொழிந்தார்.

கிஷோர் மேலும் உரையாற்றுகையில், எமது தாய் மொழியான தமிழ்மொழியானது பாரம்பரிய சிறப்புக்கள் மிக்கதொரு செழுமையானதொரு மொழியாகும். நாட்டின் வட- கிழக்கு பிரதேசத்தின் ஆட்சி மொழியாகவும் தமிழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது சபையும் 100மூ தமிழ்மொழிபேசும் மக்களைக்கொண்டதொரு சபையாகும்.

இந்நிலையில் சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் விளம்பரப்பலகைகள், அறிவித்தல் பலகைகள் என்பவற்றி பிறமொழிகளே முதன்மை பெற்றுள்ளன. நகரின் மத்தியில் சிறப்பாக அமையப்பெற்றுள்ள பேரூந்து நிலையப்பெயரில் கூட தமிழ்மொழி இரண்டாம் நிலையில் அமையப்பெற்றுள்ள அவலநிலை காணப்படுகிறது. வர்த்தக நிலையப்பலகைகளில் கூட தமிழ் சிறு அளவில் இரண்டாம் இடத்திலேயே காணப்படுவதுடன், சில இடங்களில் தமிழே இல்லாத நிலையும் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையை மாற்றி சபை எல்லைக்குட்பட்டபிரதேசங்களில் உள்ள சகல நிலைகளிலும் தமிழை முதன்மை அந்தஸ்துள்ள மொழியாக எழுதுவிக்கவும், புதிதாக சபையால் அங்கீகாரம் வழங்கப்படவுள்ள விடயங்களில் தமிழ்மொழியை முதன்மையானதாக செயற்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கவேண்டும். சின்ன சின்ன விடயங்களில் கூட எமது மொழியை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு , கட்டமைக்கப்பட்ட நுண்ணிய அழிப்பை எதிர்நோக்கி வரும் எமது சமுதாயத்தையும், மொழியையும் காப்பாற்றுவதற்காக இத்தீர்மானத்தை  சபையினர் நிறைவேற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொள்வதுடன்,  எமது சபையின் இத்தீர்மானம் பற்றி எமது மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இத்தீர்மானத்தை வடமாகாணசபையில் கொண்டுவரச்செய்து, வடக்கு மாகாணமெங்கும் தமிழ்மொழியின் பயன்பாட்டை முதன்மை நிலைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளவுள்ளேன் எனவும் தெரிவித்தார். இத்தீர்மானம் சபையினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துக்கள் :