மன்னார் மனிதப் புதைகுழி திடீரென புதைக்கப்பட்டதேன்?

8.3.14

மன்னார் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி விவகாரமானது பலதிருப்பங்களையும் ஆச்சரியங்களையும் ஏற்படுத்தி பாரிய விவகாரமாக வந்து கொண்டிருந்தவேளை திடீரென நிறுத்தப்பட்டு தோண்டும் விவகாரமும் புதை குழியில் போடப்பட்டதேன் என சி. பாஸ்க்கரா கேள்வி எழுப்பினார்.


ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா மேலும் தெரிவிக்கையில்,
எமது தமிழ் சிறுபான்மை மக்களின் உரிமை, உணர்வுகளுக்காக குரல் கொடுக்கும் சக்திகளின் பலம் மேலும் மேலும் வலுப்பெறாத போது மலையக மக்களின் வாழ்வாதார உரிமை பிரச்சினைகள் மூடிமறைக்கப்படும் நிலையே வடகிழக்கு மத்திய மாகாணத்திலும் ஏற்படும்.
வடகிழக்கு மாகாண மக்கள் ஆணித்தரமான ஆதரவு மூலம் வடமாகாணசபை வெற்றி பெறவைத்து அச்சபை மூலமும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் உரத்து குரல் கொடுத்த காரணத்தினாலேயே மன்னார் புதை குழி விவகாரம் உடனடியாக புதைக்கப்படாமல் தோண்டப்பட்டது.

இப்படி இருந்தும் ஜெனீவா சம்பந்தமாக தமிழ் தலைவர்களின் கவனம் திரும்பிய நேரம் சத்தம் இல்லாமல் மன்னார் புதைகுழி தோண்டல் மூடிமறைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளமையானது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததும் தமிழ் மக்கள் மேலும் பலம் பொருந்திய சக்தியாகவும் உரத்து குரல் கொடுக்கும் சக்தியாகவும் மேலும் மேலும் பரிணமிக்க வேண்டிய காலம் இது என மீண்டும் கட்டியம் கூறுவதாக உள்ளது.

மலையக மக்களின் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தும் கூட அங்கு அரசு, அரசு சார்பான கட்சிகளாக உள்ள காரணத்தால் மலையக மக்களின் குரல் வெளிவருவதில்லை ஆனால் இங்கு நிலமை அப்படி இல்லையாயினும் கூட அரசு தனது சதித்தனத்தை காட்டி மூடி மறைக்கும் செயலானது தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு, மத்தி மலையகம் என ஒன்று சேர்ந்து சோரம் போகாத தலைமைகளை ஆதரித்து உரிமைகள் உணர்வுகளை வென்றெடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை.

வடகிழக்கு மக்களின் இவ்வளவு பலம் பொருந்திய சக்தியாக உரத்து குரல் கொடுக்கும் சக்தியாக பரிணமித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ள வேளையில் கூட அரசின் மூடி மறைப்பு இவ்வளவு இருக்குமாயின், அரச அரசு சார்பு கட்சிகளின் கையில் உள்ள பகுதிகளில் சிறுபான்மை இன மக்களின் நிலை என்னவாக இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியாத நிலையாகவே உள்ளது.

இந்நிலையில் மேல்மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள இந்நிலையில் மக்கள் திரண்டு சென்று கொழும்பு, கம்பஹா மாவட்ட மக்கள் ஏணி சின்னத்திற்கும் கொழும்பு மாவட்ட மக்கள் தலைவர் மனோ கணேசனின் பாரிய வெற்றிக்கு வித்திட்டு தமிழர்களுக்காக உரத்து குரல் கொடுக்கும் எமது தலைவரின் கரங்களை பலப்படுத்த ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டிய தருணமிது என குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :