திட்டமிட்ட வறுமையை ஏற்படுத்தி மக்களை சீரழிக்க அரசாங்கம் முயற்சி: சிறீதரன் எம்.பி

7.3.14


கிளிநொச்சி ஜெயபுரம் வடக்கு, தெற்கு ஆகிய பிரதேச மக்களின் குறைகளை கேட்டறியும் கலந்துரையாடல் அப்பகுதி பொது மண்டபத்தில், முழங்காவில் பிரதேச தமிழரசு கட்சியின் கிளைத் தலைவர் கோவிந்தபிள்ளை அரியநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுநோக்கு மண்டபம் ஒன்றில் ஏற்பாடாகி இருந்த நிலையில், அந்த இடத்தில் குவிந்த இராணுவத்தினர் அங்கு கூட்டத்திற்கு வந்தவர்களை அச்சுறுத்தி மண்டபத்தை பூட்டிச் சென்றுள்ளனர்.

இதன்போது அப்பகுதி மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அடாவடித்தனத்தை அப்பகுதிக்கு பொறுப்பான மேஜர் தர இராணுவ அதிகாரியே தலைமை வகித்து நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொள்ளும் இராணுவத்தின் இடையூறு காரணமாக வேறுமண்டபத்திற்கு அப்பகுதி பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாற்றப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் ஜெயபுரம் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன், அப்பகுதி மாதர் சங்க உறுப்பினர்கள், அப்பகுதியின் கட்சி அமைப்பாளர் மத்தியூஸ், பளை பிரதேசபை உறுப்பினர் வீரவாகுதேவர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் மக்கள் குறைகளை கேட்டதுடன் அங்கு தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது கருத்தில்,
இந்த நாட்டினுடைய ஜனநாயக வரையறைக்குள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட சுதந்திரமாக கூட்டம் நடத்துவதற்கு எத்தனை தடைகள், அச்சுறுத்தல்கள் நடைபெறுகின்றது என்பதை இந்த உலகம் அறியும். அதை அறியச் செய்வோம்.
இன்று வறுமையை பயன்படுத்தி வீடுகளுக்குள் புகுந்து வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்க்கும் சட்ட வரையறைக்குள் இல்லாத நடவடிக்கையை இன்று இராணுவம் செய்துவருகின்றது.
அரசியல் என்பது நாகரீகமானது, சமத்துவம் ஆனது. இந்த நாகரீகமான அரசியலை இந்த நாட்டுக்குள் நாம் விரும்புகின்றோம். இதையே உலகமும் இன்று விரும்புகின்றது.
எனவே இந்த நாகரீகத்தை மீறும் இராணுவத்தின் இந்த நடவடிக்கையை நான் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு எழுதுகிறேன்.

நாம் எமது மக்களுக்கான சுதந்திரமான அரசியலை நடத்த இந்த அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். இராணுவத்தின் மக்கள் மீதான தலையீடுகள் விரும்பத்தக்கதல்ல என குறிப்பிட்டார்.
இங்கு வந்த ஜெயபுரம் பிரதேச மக்கள், தமது விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், தமது பிரதேசத்துக்கான கட்சியின் உப கிளை ஒன்றை நிறுவ ஆவன செய்ய வேண்டுமெனவும் பா.உறுப்பினரிடம் வேண்டிக்கொண்டனர்.

0 கருத்துக்கள் :