சிறுமி விபூசிக்காவின் கைதுடன் இலங்கை அரசு பாவச்சாதனை - மனோ கணேசன்

15.3.14

சிறுமி விபூசிக்கா, அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா ஆகியோரை இலங்கை அரசு கைது செய்ததன் மூலம் பாவம் செய்வதிலும் சாதனை படைத்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்;துள்ளார்.

இன்று கொழும்பில் மக்கள் கண்காணிப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வருடம் இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும், வடக்குக்கு சென்ற போது அங்கு நடைபெற்ற காணாமல் போனோரது குடும்ப அங்கத்தர்களின் ஆர்ப்பாட்டங்களில் சிறுமி விபூசிக்காவும், அவரது தாயாரும் பிரதான பங்கு வகித்திருந்தனர்.

இதை தொடர்ந்து தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகவும், தானும், தன் மகளும் அச்சறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், ஜெயகுமாரி பாலேந்திரா மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு தகவல் அனுப்பி இருந்தார். அதுபோல் அவர் தனது நிர்க்கதி நிலைமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும், கொழும்பில் உள்ள தூதரகங்களுக்கும் அறிவித்திருந்தார் என்பதும் எமக்கு தெரியும்.

காணாமல் போன தம் உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் செய்யும் குடும்ப அங்கத்தவர்களை கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கையாகவே நாம் இதை கருதுகிறோம். அரசு சட்ட விரோத சந்தேக நபர்களை தேடி கைது செய்வதை நாம் தடுக்க முனையவில்லை.

ஆனால், பயங்கரவாதிகளை தேடி அழிக்கின்றோம் என்ற போர்வையில், காணாமல் போன தம் உறவுகளை தேடி அலைபவர்களையே நீண்ட நாள் வேவு பார்த்து, அச்சுறுத்தி கைது செய்வதை நாம் ஏற்க முடியாது. அது மட்டுமல்லாமல், தனது அரசியல் இராணுவ கபட நோக்க நடவடிக்கைகள் அனைத்துக்கும், புலிகளை கைது செய்கிறோம் எனக்கூறி நியாயம் கற்பிப்பதையும் ஏற்க முடியாது.

கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள். அதிலும் ஒருவர் சிறுமி. இந்நிலையில் இவர்கள் கைது செய்யப்படும் போது பெண் அதிகாரிகள் இருக்கவில்லை என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இது கொடூரமானது.

சிறுமி விபூசிக்கா பாலேந்திரா மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா ஆகியோர் ஐநா மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சாட்சியம் ஏதும் அளித்து விடுவார்களோ என்ற அச்சம் இந்த அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

நடைபெற்ற குற்றசெயல்கள் தொடர்பாக சாட்சியம் கூறி, சர்வதேச சமூகத்துக்கு தங்கள் துயர்களை எடுத்து சொல்லும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நியதி. இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இதையே சொல்லி சென்றுள்ளார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது - என்றார்.

0 கருத்துக்கள் :