மனித உரிமை செயற்பாட்டாளர்கள் புலனாய்வு பிரிவினரால் கைது

17.3.14

இலங்கையின்  மனித உரிமை செயற்பாட்டாளர்களாக அறியப்படும் ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட் தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டதின் கீழ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று  இரவு கிளிநொச்சி பகுதியில் வைத்து விஷேட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளி நொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நேற்று  இரவே வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில்  மேலதிக விசாரணைகளுக்காக  கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டதின் கீழ் இவ்விரு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர்கள் விஷேட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையே ஸ்திரமற்ற நிலைமையினை ஏற்படுத்த முனைந்தமை மற்றும்  பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் விதமாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும்  கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டமையையும் அவர் உறுதி செய்தார். இந் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டதின் கீழ் அவர்கள் மீதான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராக ருக்கி பெர்ணான்டோ செயற்பட்டுவரும் நிலையில் அருட் தந்தை பிரவீன் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் அமைதிக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பின் பணிப்பாளராக செயற்பட்டுவருகிறார். இந் நிலையிலேயே கடந்த வியாழனன்று கிளிநொச்சியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக செயற்பட்ட கோபி என்பவருக்கு அடைக்களம் கொடுத்தமை பாதுகாப்பளித்தமை ஆகிய குர்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 50 வயதான பாலேந்திரன் ஜெய குமாரியின் கைது மற்றும் அவரது மகள் விபூசிகா தொடர்பில் ஆராய அங்கு சென்ற போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

தான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதை குறுஞ் செய்தியூடாக தனது நண்பர்களுக்கு ருக்கி பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.அத்துடன் ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட் தந்தை பிரவீன் ஆகியோரிடம் தனித்தனியாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொன்ட நிலையிலேயே இன்று கொழும்புக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :