இளைஞர்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்

25.3.14

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரசேத்தில் இன்று முற்பகல் நான்கு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய படைத்தரப்பு, அவ்விளைஞர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுசுட்டான் – முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள கூழாமுறிப்புப் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றினுள் அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர் நின்றிருந்தபோது, அங்கு திரண்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அகஸ்டீன் சலூஜன் (வயது 24), இராசேந்திரம் கமலதாஸ் (வயது 19), சுரேஷன் (வயது 25), நஜீதரன் (வயது 25) ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தினை அவதானித்த அந்தக் கிராம மக்கள் அங்கு திரண்டபோது, இரண்டு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் அங்கு ஒட்டப்பட்டிருந்த “தேவைப்படுவோர்” தொடர்பிலான சுவரொட்டிகளை அகற்றினார்கள் என்பதாலேயே அவர்களை தாம் கைது செய்ததாக தெரிவித்த படைத்தரப்பு, அவர்களை ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றது.
தற்போது நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :