விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி : ராம்ஜெத்மலானி பேச்சு

8.3.14

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு, ம.தி.மு.க.வின் மறுமலர்ச்சி வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

வைகோ வாழ்த்திய, இந்த விழாவில் ராம்ஜெத்மலானி பேசியபோது,  ‘’தமிழ்நாட்டு மக்கள் மீது தனி அன்பும், பாசமும் வைத்திருப்பவன் நான். மறுபிறவியில் தமிழ் பேசக்கூடிய நபராக பிறக்க ஆசைப்படுகிறேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் சாந்தன் குற்றமற்றவர்கள்.

நான் நீதிபதியாக இருந்திருந்தால் அவர்களுக்கு மட்டுமின்றி, யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கி இருக்க மாட்டேன். சிறை தண்டனை என்பதே குற்றவாளிகளுக்கு போதுமான தண்டனை என்பது என்னுடைய கருத்து. மரண தண்டனையே இருக்க கூடாது என்பது என்னுடைய வாதம்.

தற்போது இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டும் என்று அறிவித்த முடிவு மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுதலுக்குரியது. எனினும் ஜெயலலிதா தனது நிலைப்பாட்டில் நம்பிக்கையுடனும், தெளிவுடனும் செயல்பட்டு வெற்றி காண வேண்டும்.

நீதிபதி சின்னப்பா ரெட்டி தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் கால தாமதமாக நிராகரிக்கப்பட்டால், குற்றவாளிகளின் தண்டனையை குறைக்கவோ அல்லது விடுதலை செய்யவோ முடியும் என்று ஒரு தீர்ப்பில் கூறியிருந்தார். அந்த தீர்ப்பின் அடிப்பிடையிலேயே என்னுடைய வாதம் அமைந்தது.

சீனா, பாகிஸ்தான் நாடுகள் இலங்கையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திவிடக்கூடாது என்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி. ஆனால் தற்போது காங்கிரசார் விடுதலை புலிகளை தீவிரவாத அமைப்புகளை போல பார்ப்பது வேடிக்கையான ஒன்று. காங்கிரஸ் கட்சி துதிப்பாடும் கட்சியாக செயல்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :